சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜப்பானில் 2ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்

ஜப்பானில் 19 ஆயிரம் பேரை பலி வாங்கியதுடன், மோசமான அணு விபத்துக்குக் காரணமாக அமைந்த சுனாமியின்

Updated On :12 மார்ச் 2013, 8:49 am

ஜப்பானில் 19 ஆயிரம் பேரை பலி வாங்கியதுடன், மோசமான அணு விபத்துக்குக் காரணமாக அமைந்த சுனாமியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இது தொடர்பாக தலைநகர் டோக்கியோவில் அரசு சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஜப்பான் மன்னர் அகிஹிடோ மற்றும் அவரது மனைவியும் ராணியுமான மிச்சிகோ பங்கேற்றனர். குறிப்பாக, சுனாமிக்குக் காரணமாக அமைந்த பூகம்பம் ஏற்பட்ட நேரமான மதியம் 2.46 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

ஜப்பானின் வடகிழக்கு கடல் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி மதியம் 2.46 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 9 அலகுகளாக பதிவானது. இதையடுத்து, ஃபுகுஷிமா மாகாணத்தின் கடற்கரையை சுனாமிப் பேரலைகள் தாக்கின.

சுனாமி தாக்குதலுக்கு 15,881 பேர் உயிரிழந்தனர். மேலும் 2,668 பேரைக் காணவில்லை. சுனாமி தாக்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தபோதிலும், இன்னமும் 3,15,196 பேர் வீடின்றி தவிக்கின்றனர். இவர்களில் பலர் தாற்காலிக குடிலில் தங்கி உள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் சுனாமி தாக்குதலால் இதுவரை இல்லாத வகையில் அணு விபத்து ஏற்பட்டது. ஃபுகுஷிமாவில் அமைந்துள்ள டெய்-இச்சி அணு மின் உற்பத்தி நிலையத்தின் அணு உலைகள் வெடித்து கதிர் வீச்சு வெளியானது. 1986ஆம் ஆண்டு செர்னோபில் அணு விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய விபத்தாக இது கருதப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

விவசாயம் பாதிப்பு: கதிர் வீச்சு காரணமாக விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கதிர்வீச்சு அபாயம் காரணமாக இப்பகுதியில் விளையும் விவசாய விளைபொருள்களை வாங்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், மிச்சம் மீதி உள்ளவர்களும், நிலத்தை பண்படுத்துவதா அல்லது பாதுகாப்பான வேறு இடங்களுக்குப் புலம் பெயர்வதா என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆனால், விவசாய விளைபொருள்களில் கதிர்வீச்சு பாதிப்பு உள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே பிற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதாக அரசு கூறுகிறது. மேலும், அணு உலையிலிருந்து இப்போது கதிர்வீச்சு வெளியாகவில்லை என்றும் கூறியுள்ளது.

இழப்பீடு கேட்டு வழக்கு: இதற்கிடையே, ஃபுகுஷிமா நீதிமன்றத்தில் 800க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

பழைய நிலைக்கு திரும்பும் வரை மாதந்தோறும் ரூ.28,000 இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் அணுசக்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

பூகம்ப அதிர்வை பதிவு செய்த செயற்கைக்கோள்: ஜப்பானில் நிகழ்ந்த பூகம்பத்தால் ஏற்பட்ட அதிர்வை, கோஸ் செயற்கைக்கோள் பதிவு செய்ததாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சிறு அதிர்வையும் உணரக்கூடி இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 255 கி.மீ. உயரத்தில் சுற்றி வருகிறது. இதுபோன்ற நவீன வசதி வேறு எந்த செயற்கைக் கோளிலும் இல்லை.

அமெரிக்கா ரூ.3,850 கோடி உதவி: பேரழிவால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இதுவரை ரூ.3,850 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக ஜப்பான் அரசு கூறியுள்ளது.

ஜப்பானின் மியாகோ நகரில் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சுவரில் அணிவகுத்து நடந்த புத்தத் துறவிகள். 2011-ம் ஆண்டில் மார்ச் 11-ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி, அதைத் தொடர்ந்து அணுஉலையில் ஏற்பட்ட கசிவு காரணமாக 19 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.