முத்துப்பேட்டையிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம் வரை 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்துள்ள காடுகள் தான் அலையாத்திக் காடுகள்.
ஆற்று நீரும், கடல் நீரும் கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் உப்புத் தன்மை குறைவாக உள்ள நீரீல் வளரும் காடுகளை சதுப்பு நிலக் காடுகள் என்கிறோம். இந்த அலையாத்திக் காடுகளும் அந்த வகையைச் சேர்ந்தவைதான். காவிரியின் கிளை ஆறுகளான கோரையாறு, பாமணி ஆறு, வளவனாறு, கிளைதாங்கி ஆறு, நசுவினி ஆறு, பாட்டுவனாச்சி ஆறு, கண்டபறிச்சான்கோரையாறு உட்பட பல ஆறுகள் இங்கு கடலில் கலக்கின்றன. இது லகூன் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு வளரும் காடுகள் தான் அலையாத்தி காடுகள். கழுதை முள்ளி, நரிக்கண்டல், வெண்கடல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், சிறுகண்டல், தில்லை, திப்பரந்தை, நெட்டை, சுரப்புன்னை, குட்டை சுரப்புன்னை, மலட்டு சுரப்புன்னை உள்ளிட்ட மரங்கள் வளர்கின்றன. சாம்பல் நிறத்தில் இருக்கும் இம்மரங்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூக்கும் தன்மை கொண்டவை.
முத்துப்பேட்டையிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம் வரை சுமார் 15 கி.மீ. கடலோரத் தொலைவுக்கு, 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் இந்தக் காடுகள் பரவியுள்ளன. கடலிலிருந்து கடும் வேகத்துடன் வீசும் அலையின் வேகத்தை, காற்றின் வேகத்தைக் குறைத்து, கட்டுப்படுத்துவதால்தான் இந்தக் காடுகளை அலையாத்திக் காடுகள் என்று மக்கள் அழைக்கிறார்கள்.
2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும், 2008ஆம் ஆண்டு நிஷா புயல் தாக்கியபோதும், முத்துப்பேட்டை கடற்பகுதியில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் காடுகள், மேற்குவங்கம், ஒரிசா மாநிலங்களில் உள்ள சுந்தரவனக் காடுகள் ஆகியவையும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். முத்துப்பேட்டை அலையாத்திக் காட்டில், அவீசினியா என்னும் இனத்தைச் சேர்ந்த குறுமரங்களே அதிகம் உள்ளன. அதில் இரண்டு வகை மரங்கள் உள்ளன. அவற்றை உள்ளூர் மக்கள் வெண்சுண்டல், கருஞ்சுண்டல் என அழைக்கின்றனர்.
மேலும் ஒரிசா மற்றும் பிச்சாவரம் காடுகளிலிருந்து எடுத்துவரப்பட்ட சுரபுன்னை என்னும் தாவரமும் இப்போது வனத் துறையினரால் இந்தக் காட்டுப் பகுதியில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இந்தக் காடுகளில் வளரும் தாவரங்கள் வேர்களால் சுவாசிப்பவை. எனவே, ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் தண்ணீருக்குள் இருந்து மேல்நோக்கி வளர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான வேர்களைக் காண முடியும். இந்த வேர்களுக்கு இடையே தங்கி இனப்பெருக்கம் செய்வதற்காக ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் அலையாத்திக் காடுகளைத் தேடி வருகின்றன.
குறிப்பாக, இந்தப் பகுதியில் பல வகையான நண்டுகள், இறால்கள் அதிகம் கிடைக்க இதுவே காரணம். இங்குதான் கொடுவா மீன் அதிக அளவில் கிடைக்கிறது. மேலும், வடகிழக்குப் பருவ மழை காலத்தில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கு வருகின்றன.
உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் இப்போது ஏராளமானோர் அலையாத்திக் காடுகளைக் கண்டு ரசிப்பதற்காக வருகின்றனர். எனினும், இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், மீனவர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விறகுக்காக அலையாத்திக் காடுகளை வெட்டுவது அதிகமாக இருந்தது. ஆனால், விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்ட ஏழை மக்களுக்கு இப்போது மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விறகு அடுப்புகளைப் பயன்படுத்துவதும் இப்பகுதியில் பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், விறகுக்காக காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களின் எல்லையாக திகழும் முத்துப்பேட்டை பகுதியில் காணப்படும் அலையாத்திக் காடுகளை, இயற்கை அளித்த மாபெரும் கொடை என்றே கூற வேண்டும்.
திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து முத்துப்பேட்டை செல்லலாம். திருச்சியில் இருந்து ரயில் மார்க்கத்திலும் செல்லலாம். வேதாரண்யம், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்தும் முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
அலையாத்தி காடுகளை காண தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். பேட்டை, ஜாம்புவானோடை போன்ற பகுதிகளில் இருந்து படகுகள் மூலம்தான் அலையாத்தி காடுகளின் அழகை சுற்றிப்பார்க்க முடியும்.. 7 கிலோ மீட்டர் தொலைவு ஆற்றில் செல்லும்போது இருபுறமும் இருக்கும் அலையாத்தி காடுகள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், பிரம்மிப்பாகவும் உள்ளன. ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள பார்வை கோபுரங்களில் ஏறி லகூன் அழகை காணலாம்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

