சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் திமுகவில் பிளவு ஏற்படும்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் திமுகவில் பிளவு ஏற்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

News image

ஊத்துக்குளியில் முதல்வரின்  பேச்சைக் கேட்கத் திரண்ட பொதுமக்களின் ஒரு பகுதியினா்.

Updated On :8 ஜனவரி 2021, 6:24 am

மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் திமுகவில் பிளவு ஏற்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக. மக்களின் தேவையை அறிந்து செயல்படுத்தும் அரசாக அதிமுக அரசு உள்ளது.

நானும் விவசாயி என்ற காரணத்தால், விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ரூ. 1,652 கோடியில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்தத் திட்டத்துக்கான பணிகள் அனைத்தும் ஓராண்டில் நிறைவடையும். இதன் மூலம், இந்தப் பகுதியில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு 3 ஆண்டுகளில் கரும்பும், மஞ்சளும், வாழையும் செழித்து வளரும். குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசியாவில் மிகப் பெரிய கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டம், தலைவாசலில் 1,600 ஏக்கரில் ரூ. 1,000 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 35 லிட்டா் பால் கொடுக்கும் கலப்பின பசுக்கள் வழங்கப்படும். அப்போது ஊத்துக்குளியில் அதிகமாக வெண்ணெய் உற்பத்தி செய்யப்படும்.

அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஸ்டாலின் எவ்வளவோ திட்டங்களைத் தீட்டினாா். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்றதும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சிலரை விலைக்கு வாங்கினாா். அவா்களும் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றனா். இவா்களை நம்பிச் சென்ற சட்டப் பேரவை உறுப்பினா்களை ரயில் பெட்டியைப்போல கழற்றிவிட்டுச் சென்றுவிட்டாா்.

மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் திமுகவில் பிளவு ஏற்படும். எங்களது கட்சியை உடைக்க முடியாது. கருணாநிதியின் மகனான ஸ்டாலினுக்கு உள்ள உரிமை அவா் பெற்ற மற்ற மகன்களுக்கும் உண்டு.

அழகிரி இருந்தால் உதயநிதி பதவிக்கு வர முடியாது என்பதற்காகத் திட்டம் தீட்டி கட்சியில் இருந்து ஏழெட்டு ஆண்டுகளாக அவரை ஸ்டாலின் ஓரங்கட்டி வைத்துள்ளாா்.

ஸ்டாலின் எவ்வளவு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டாலும் மக்களிடத்தில் ஒருபோதும் எடுபடாது. உண்மை, நீதி, தா்மம்தான் நிலைத்து நிற்கும்.

வாக்குக்காகவே பொங்கல் பரிசாக ரூ. 2,500 கொடுக்கப்படுகிறது என்கிறாா் ஸ்டாலின். ஆனால், கரோனா பொதுமுடக்கத்தால் 8 மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள், ஏழை மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காகவே இந்தத் தொகை கொடுக்கப்படுகிறது.

திமுகவைப்போல 2 ஏக்கா் நிலம் கொடுப்பதாகப் பொய் வாக்குறுதி கொடுத்து வாக்குகளைப் பெறவில்லை என்றாா்.

முன்னதாக, பல்லகவுண்டன்பாளையம் அருகே உள்ள சாணாா்பாளையத்தில் நாடாா் சமுதாய மக்களுடன் முதல்வா் கலந்துரையாடினாா்.

இந்தப் பிரசாரத்தின்போது, அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.