தமிழகம் முழுவதும் உள்ள பல அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளோ, குழந்தைகள் விளையாடுவதற்கான வசதிகளோ இல்லை என்று தோழமை என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அங்கன்வாடி மையங்கள் தொடர்பாக தோழமை என்ற அமைப்பு - குழந்தை உரிமைகளும், நீங்களும் ("கிரை') - என்ற அமைப்பின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆய்வு நடத்தியது.
தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் மையங்களில் 500 அங்கன்வாடி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஜூன் 2012 முதல் டிசம்பர் 2012 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
நீதிபதி டி.என். வள்ளிநாயகம் இந்த ஆய்வு அறிக்கையை சென்னையில் வியாழக்கிழமை வெளியிட பேராசிரியர் சரஸ்வதி பெற்றுக்கொண்டார்.
அதன்பிறகு, தோழமை அமைப்பின் இயக்குநர் தேவநேயன் சென்னையில் நிருபர்களிடம் கூறியது:
அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகளில் 97 சதவீதம் பேர் வறுமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள குழந்தைகளாகவுமே உள்ளனர்.
இந்த மையங்களில் 24 சதவீத மையங்கள் மதிய உணவுக்குப் பிறகு செயல்படுவதே இல்லை என தெரியவந்துள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மொத்தம் 5 மணி நேரம் செயல்பட வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.
மீதமுள்ள மையங்களிலும் பெரும்பாலும் எந்தவிதச் செயல்பாடுகளும் நடைபெறாததால் குழந்தைகள் வீடுகளுக்குத் திரும்பிவிடுகின்றனர். ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மையங்களில் 300 மையங்களில் சரியான தரமான குழந்தைகள் நலம் பேணும் கழிப்பறைகள் கிடையாது.
கழிவறை வசதி உள்ள மையங்களிலும் சரியான பராமரிப்பு இல்லாததால் குழந்தைகள் திறந்தவெளியைத்தான் பயன்படுத்துகின்றனர்.
மேலும் 359 மையங்களில் தரமான, பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாததால் குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதேபோல், 290 மையங்களில் விளையாட்டுப் பொருள்களோ, விளையாடப் போதுமான இடமோ இல்லை. இதனால், இந்த மையங்களில் குழந்தைகளுக்கு விளையாட்டுக் கல்வி மறுக்கப்பட்டுள்ளது.
அதோடு, 159 மையங்களில் முதலுதவிப் பெட்டி கிடையாது. ஆகவே, குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ளது. 153 மையங்களில் தரமான பாய் வசதி இல்லை. சில மையங்களில் பாய் வசதியே இள்லாமல் பழுதடைந்த தரையில் குழந்தைகள் உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.
63 சதவீத மையங்கள் வாடகைக் கட்டடங்களில்தான் இயங்கி வருகின்றன. 377 மையங்களில் தனி சமையலறை கிடையாது. இதனால், சமைக்கும் இடத்திலிருந்து வரும் புகை, குழந்தைகளின் நலத்துக்குக் கேடு விளைவிக்கிறது.
மொத்தம் 30 சதவீத மையங்களில் மேற்கூரை, சுவர்கள் மற்றும் தரை ஆகியவை பழுதடைந்த நிலையில் உள்ளன
குழந்தைகளுக்கு 23 சதவீத மையங்களில் விளையாட்டுமுறை கற்பித்தல் செயல்படுத்தப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது. ஆரம்பக் கல்வியும் 7 சதவீத மையங்களில் வழங்கப்படுவதில்லை. மொத்தமாக 30 சதவீத மையங்களில் குழந்தைகளுக்கு உரிய முறையில் விளையாட்டு மற்றும் ஆரம்பக் கல்வி வழங்கப்படவில்லை.
60 சதவீத மையங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. அதோடு, 11 சதவீத மையங்களில் குழந்தைகளுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்த கல்வி வழங்கப்படவில்லை. பல மையங்களில் குழந்தைகளின் மாற்றுத்திறன் பிரச்னை முன்கூட்டியே கண்டறியப்படவில்லை.
மேலும் 9 சதவீத அங்கன்வாடி மையங்களில் சத்துக் குறைபாட்டைப் போக்கும் உணவுகள் வழங்கப்படுவதில்லை.
10 சதவீத மையங்களில் பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. காய்கறிக்காக ஒவ்வொரு குழந்தைக்கும் 25 பைசா என்ற அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதைக் கொண்டு அவர்களுக்கு எவ்வாறு சத்தான காய்கறிகளை வழங்க முடியும் என்று தேவநேயன் கேள்வி எழுப்பினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


