சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திமுக ஆட்சியில்தான் மகளிர் முன்னேற்றம்

மகளிர் முன்னேற்றத்துக்காக திமுக ஆட்சியில்தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 7:46 am

மகளிர் முன்னேற்றத்துக்காக திமுக ஆட்சியில்தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சியில் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் திமுக ஆட்சியில் மகளிருக்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் குறிப்பிட விரும்புகிறேன். 1989-ல் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, திமுக ஆட்சியில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் 1989-ல் திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

1989-ல் அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. 1989-ல் டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் என் தாயார் பெயரில் இருந்ததால் தற்போது இந்தத் திட்டம் நீக்கப்பட்டுவிட்டது.

டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமணத் திட்டம் 1975-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள மாணவிகளுக்கு பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்க ஆணையிடப்பட்டது.

இந்தியாவிலேயே முதலாவதாக உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

1992-ல் அதிமுக ஆட்சியில்தான் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது என்று முதல்வர் கூறியுள்ளார்.

ஆனால் 1973-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் காவல் துறையில் பெண்களை நியமனம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

1990-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெற்றனர்.

1989-ல் தருமபுரியில் தொடங்கிய மகளிர் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல உருவாக்கப் பட்டுள்ளன.

இப்படி திமுக ஆட்சியில்தான் பெண்கள் சமூகம், கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேறவும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் திகழவும் வழிவகை காணப்பட்டது என்று கருணாநிதி கூறியுள்ளார்.