சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 96% இழப்பீட்டுத் தொகை: தமிழக அரசு

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 96 சதவீதம் பேருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:41 am

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 96 சதவீதம் பேருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுடன் வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் சென்னையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியது:

கல்வி உதவித் தொகை, விபத்து நிவாரணம் உள்பட இதுவரை 19 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு ஆயிரத்து 906 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 52 ஆயிரத்து 613 விவசாயிகளுக்கு ரூ.524.25 கோடி பயிர் இழப்பீட்டுத் தொகையானது அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா அல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் இதுவரை 17 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு 804 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 3.87 கோடி பேருக்கு பயோ மெட்ரிக் மூலம் அடையாளம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 2.52 கோடி பேருக்கு ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி வருவாய் அலுவலர்கள் செல்லும் "அம்மா' திட்டத்தின் கீழ், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 27.50 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அதில், 17.1 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ், 4 ஆயிரத்து 355 கிராமங்களில் வசிக்கும் 68.1 லட்சம் பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது என்றார் அமைச்சர் வெங்கடாசலம்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வருவாய் ஆணையாளர் டி.எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.