சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கிருஷ்ணகிரி அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்; போலீஸார் தடியடி

கிருஷ்ணகிரி அருகே பாலகுறி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பின்னர், 19 பேரைக் கைது செய்தனர்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 8:50 am

கிருஷ்ணகிரி அருகே பாலகுறி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். பின்னர், 19 பேரைக் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் உள்ள பாலகுறி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக கிராமத்தில் சரிவரக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். சீரான மின் விநியோகம் இல்லாததால், குடிநீர் விநியோகிக்க முடியவில்லை என ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் மின் வாரிய அலுவலகத்திலும், ஊராட்சி நிர்வாகத்திலும் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

திடீர் சாலை மறியல்: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதி ஆண்களும், பெண்களும் நூற்றுக்கணக்கானோர் காலிக் குடங்களுடன் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியர் ஸ்ரீவள்ளி, காவல் துணைக் கண்காணிப்பாளர் ம.சந்தானபாண்டியன், ஆய்வாளர்கள் அன்புமணி, சந்திரகாந்தா ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினர். எனினும், பொதுமக்கள் சமாதானம் அடையாமல் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், கூட்டம் கலைந்து சென்றது. மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஒரு பெண் உள்பட 19 பேரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து டிஎஸ்பி ம.சந்தானபாண்டியன் கூறியது: பாலகுறியில் பொதுமக்கள் நீண்ட நேரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுட்டனர். அப்போது, அந்த வழியாக கர்ப்பிணியை ஏற்றிக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. இதனால், வாகனத்துக்கு வழிவிடும்படி கேட்டும், அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். எனவே, பொதுமக்களை அங்கிருந்து கலைத்தோம் என்றார் அவர்.