பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய, தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வலியுறுத்தினார்.
கடந்த மாதம் 19-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷுக்கு மாநில பாஜக சார்பில் சேலத்தில் வியாழக்கிழமை நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அத்வானி, மறைந்த ரமேஷின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அவர் பேசியது:
பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் தேசத்தின் ஒருமைப்பாடுக்காக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் நல்ல பெயர் எடுத்த சிறந்த மனிதர்.
எதிரிகளே இல்லாத அஜாதசத்ருவைப் போன்ற அவருக்கு இப்படி ஒரு துயரமான முடிவு ஏற்படும் என்று யாரும் எண்ணிப் பார்க்கவில்லை.
யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாத அவரை என்ன காரணத்துக்காகக் கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. மதிப்புமிக்க, நேர்மையான மனிதரான ஆடிட்டர் ரமேஷ், ஒரு தேச பக்தர் என்பதாலேயே கொல்லப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன். அவர் கொலை செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் அனைத்துக் கட்சியினரும் கண்டனமும், இரங்கலும் தெரிவித்தனர்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகத் திரண்டு வந்துள்ள சேலம் மக்களுக்கும், மறைவின் போது கடையடைப்பு செய்து இரங்கல் தெரிவித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரமேஷின் கொலை குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதை பாஜக வரவேற்கிறது. ஆனால், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தால்தான் முதல்வரின் நோக்கம் வெற்றி பெற்றதாக அமையும்.
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து தனிக் கவனம் செலுத்தி, கொலையாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாஜக திருப்தி அடையும்.
கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த 1998, பிப்ரவரி 14-ஆம் தேதியை எப்படி எனக்கு மறக்க முடியாத நாளாக மாறியதோ, அதேபோல ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்ட ஜூலை 19-ஆம் தேதியும் என்னால் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுக்காகப் பாடுபட்ட ஜன சங்கத்தின் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி, பொதுச் செயலாளர் தீனதயாள் உபாத்யாய போன்றோரை நாங்கள் ஏற்கெனவே இதேபோல இழந்துள்ளோம். தமிழகத்தில் டாக்டர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் போன்றவர்களும் அண்மையில் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டனர். பாஜகவால் இனியும் இதுபோன்ற செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. தமிழகத்தில் மட்டுமன்றி, நாடு முழுவதிலும் நாட்டுக்காகத் தியாகம் செய்யும் தேச பக்தர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதுபோன்ற தேச விரோதிகளின் இரக்கமற்ற செயல்பாடுகளை நாட்டை ஆள்பவர்கள் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த சில மாதங்களில் பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், அதைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றதில் இருந்து நாட்டில் ஊழலும், பண வீக்கமும் மட்டுமே முக்கிய விஷயங்களாகப் பேசப்படுகின்றன.
பாஜகவிடம் நரேந்திர மோடி, சிவராஜ் சிங் செüகான், ரமன்சிங் போன்ற சிறந்த முதல்வர்கள் உள்ளனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளிடம் இதுபோன்ற செல்வாக்கு மிகுந்த முதல்வர்கள் யாரேனும் உள்ளனரா?
நாட்டு மக்கள் தங்களுக்கு சிறந்த அரசை, நேர்மையான அரசை யார் கொடுக்க முடியும் என்று சிந்தித்து வருகின்றனர். அதனால், அடுத்து வரக்கூடிய தேர்தல் முடிவுகள் இதுவரை பார்த்திராத வகையில் இருக்கும்.
ஊழல், பயங்கரவாதம் என்ற இரண்டு தீய சக்திகளையும் பாஜக எப்போதும் சகித்துக் கொண்டதோ, சமரசம் செய்து கொண்டதோ இல்லை. எனவே, நாட்டைக் காக்கும் பொறுப்பை மக்கள் பாஜகவிடம் அளிப்பார்கள் என்றார் அத்வானி.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், தேசியச் செயலாளர் தமிழிசை செüந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், லலிதா குமாரமங்கலம், மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மறைந்த ஆடிட்டர் ரமேஷுக்கு மெüன அஞ்சலி செலுத்தினர். சேலத்தில் அத்வானி வருகையையொட்டி, 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

