ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் காய்கறி விலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடங்கியுள்ள மலிவு விலை காய்கறி கடைகளுக்கு பொது மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சில்லறை விற்பனைக் கடைகளைவிட 40 சதவீதம் விலை குறைவு என்பதால், முதல் நாளான வியாழக்கிழமை பிற்பகலுக்குள் பெரும்பாலான கடைகளில் உள்ள அனைத்து காய்கறிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
டீசல் விலை உயர்வு, மழைக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் சில மாதங்களாக காய்கறிகளின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகின்றன. சமையலுக்கு அத்தியாவசியத் தேவையான சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 120 வரை சென்று உச்சம் தொட்டது.
இந்த நிலையில் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 31 மலிவு விலை காய்கறிக் கடைகளை முதல்வர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
விற்பனை எப்போது: இந்தக் கடைகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடை செயல்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் விற்பனைப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே மக்கள் ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மலிவு விலை காய்கறிக் கடைகளுக்கு வந்த பொது மக்கள் சிலர் தெரிவித்த கருத்துகள்:
விஜயலட்சுமி (குடும்பத் தலைவி - திருவல்லிக்கேணி): நாளுக்கு நாள் காய்கறிகளின் விலை உயர்வதால், மாத பட்ஜெட்டில் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்த நிலையில் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக மலிவு விலை காய்கறி கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
வெளிக் கடைகளில் விற்பதைவிட இங்கு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரைக் குறைவாகக் கிடைக்கிறது. இதனால் அதிக அளவிலான காய்கறிகளை நான் வாங்கி செல்கிறேன்.
பாலசுப்ரமணியன் (தொழிலாளி - வடபழனி): அம்மா உணவகத்தைத் தொடர்ந்து, மலிவு விலை காய்கறி கடைகளைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தக் கடைகளில் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துக் காய்கறிகளும் கிடைக்கின்றன. கால தாமதம் இன்றி ஒரே இடத்தில் மலிவு விலையில் காய்கறிகள் வாங்கி செல்ல இந்தக் கடைகள் வசதியாக உள்ளன.
ஜெகதீசன் ( சினிமா லைட் பாய் - ராயப்பேட்டை): எனக்கு தினமும் ஊதியமாகக் கிடைக்கும் ரூ.300 வைத்துத்தான் குடும்பம் நடத்தி வருகிறோம். இந்த நிலையில் சமீப காலமாக காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்ததால், காய்கறிகள் வாங்குவதைக் குறைத்து கொண்டேன்.
தற்போது மலிவு விலைக் காய்கறிக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது என்னைப் போன்ற நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் விதமாக உள்ளது. இந்தக் கடைகளில் காய்கறிகள் ஃப்ரெஷ் -ஆகவும், விலை குறைவாகவும் உள்ளன.
இது குறித்து மார்க்கெட் வியாபாரி செüந்தரராஜன் கூறியது: மலிவு விலைக் கடைகள் மூலம் கோயம்பேடு மார்க்கெட் விற்பனை ஓரளவு பாதிக்கும் என்பது உண்மை. ஆனால் மக்களுக்கு பயனளிக்கும் இது போன்ற திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
இந்தக் கடைகளுக்குத் தேவையான காய்கறிகளை கோயம்பேடு வியாபாரிகள் மொத்தமாக விநியோகம் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.
ரூ.100-க்கு காய்கறி பை
காலதாமதத்தைக் குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம் உள்பட 11 டியூசிஎஸ் விற்பனைக் கடைகளில் ரூ.100-க்கு பல்வேறு காய்கறிகள் அடங்கிய பை வழங்கப்படுகிறது.
இந்தப் பையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம், அரைக் கிலோ தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு, கால் கிலோ கத்தரி, வெண்டை, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் வழங்கப்படுகின்றன.
இதை தவிர தேங்காய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவையும் இலவசமாக காய்கறி பையுடன் வழங்கப்படுகின்றன. பொதுமக்களின் விருப்பத்தைப் பொருத்து ரூ.100 பையில் வாரம் ஒருமுறை காய்கறி வகைகளை மாற்றி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
காய்கறி விலை நிலவரம் (கிலோ - ரூபாயில்)
உருளைக்கிழங்கு 20 30
பெரிய வெங்காயம் 20 30
சாம்பார் வெங்காயம் 60 100
கேரட் 40 50
பீன்ஸ் 50 65
நூக்கல் 15 25
செள செள 25 42
பீட்ரூட் 20 30
முட்டை கோஸ் 18 28
பச்சை மிளகாய் 30 40
இஞ்சி 140 190
சேனை 25 32
கத்தரிக்காய் 20 28
வெண்டைக்காய் 24 34
அவரைக்காய் 40 45
கோவைக்காய் 20 25
பாகற்காய் 25 45
தக்காளி (நாடு) 30 38
காலிபிளவர் 15 28
முருங்கைக்காய் 30 50
முள்ளங்கி 16 22
புடலங்காய் 25 32
கருணைக்கிழங்கு 30 45
சுரைக்காய் 10 22
மாங்காய் 15 25
வெள்ளிரிக்காய் 15 20
எலுமிச்சை 1.50 4
தேங்காய் 8 15
கொத்தமல்லி 6 10
வாழைக்காய் 5 8
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

