பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்ற முதல் நாளான வெள்ளிக்கிழமை எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (இ.சி.இ.) பிரிவில் சேரவே அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டினர். கலந்தாய்வில் பங்கேற்ற 1,219 மாணவர்களில் 407 பேர் இந்தப் படிப்பைத் தேர்வு செய்தனர்.
இ.சி.இ. படிப்புக்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல் பிரிவை 275 மாணவர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 215 மாணவர்களும், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவை 108 மாணவர்களும், சிவில் பிரிவை 70 மாணவர்களும், ஐ.டி. பிரிவை 23 மாணவர்களும் தேர்வு செய்தனர்.
முதல் நாள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த 1,851 பேரில் 1,219 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்தனர். 628 பேர் (33.93%) கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 4 பேர் கலந்தாய்வில் பங்கேற்று எந்தப் படிப்பையும் தேர்வு செய்யவில்லை என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
கலந்தாய்வுக்கு வராத மாணவர்களில் பலர் எம்.பி.பி.எஸ். படிப்பைத் தேர்வு செய்திருப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பொதுப்பிரிவு கலந்தாய்வை உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார். மொத்தம் 534 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1.93 லட்சம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. தொழில் பிரிவு மாணவர்களைத் தவிர்த்து 1.77 லட்சம் பேர் இந்தக் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முதல் மூன்று மாணவர்கள்: பி.இ. ரேங்க் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருந்த மாணவர்கள் எஸ்.அபினேஷ், ஜி.பரணிதரன் ஆகியோர் எம்.பி.பி.எஸ். படிப்பைத் தேர்வு செய்துவிட்டனர்.
எனவே, ரேங்க் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் கே.கே. ரகுராமன் இந்த ஆண்டு முதல் மாணவராகப் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. படிப்பைத் தேர்வு செய்தார்.
ரகுராமனுக்கு அடுத்தபடியாக இருந்த அஸ்வின் குமார், அஜய் கௌதம் ஆகிய மாணவர்கள் கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்தனர்.
இவர்கள் உள்பட முதல் 20 ரேங்குகள் பெற்றிருந்த மாணவர்களில் 15 பேர் பொறியியல் படிப்புகளில் சேர்ந்தனர். அவர்களில் 8 பேர் மெக்கானிக்கல் பிரிவையும், 5 பேர் இ.சி.இ. பிரிவையும், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளை தலா ஒருவரும் தேர்வு செய்தனர்.
இவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்.
"ஆப்சென்ட்' சதவீதம் குறைவு: வழக்கமாக, பி.இ. முதல் வாரத்தில் வராத மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டும் முதல் நாளில் 628 மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரவில்லை.
"முதல் நாள் அழைக்கப்பட்டிருந்த பல மாணவர்கள் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலிலும் இடம்பெற்றிருப்பார்கள். எனவே, இவர்களில் பலர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்திருப்பார்கள்.
கடந்த ஆண்டு முதல் நாளில் 42 சதவீத மாணவர்கள் முதல் நாள் கலந்தாய்வுக்கு வரவில்லை. இந்த ஆண்டு 34 சதவீதமாக இது குறைந்துள்ளது'' என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
இ.சி.இ. மாணவர்களை ஈர்ப்பது ஏன்? இ.சி.இ. படிப்பை அதிக மாணவர்கள் தேர்வு செய்வதற்கு இந்தப் படிப்பில் உள்ள வாய்ப்புகளே காரணம் என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அவர்கள் மேலும் கூறியது: எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களிலும், கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சாப்ட்வேர் துறைகளிலும் இ.சி.இ. மாணவர்கள் வேலைக்குச் சேரலாம்.
இந்த துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. வளாகத் தேர்வு மட்டுமில்லாமல் படித்து முடித்த பிறகும் பல வேலைவாய்ப்புகள் உள்ளன. அதன்காரணமாகவே, பல மாணவர்கள் இந்தப் பிரிவைத் தேர்வு செய்கின்றனர்.
அடிப்படை எலெக்ட்ரானிக்ஸ் படிப்புகளிலிருந்து வி.எல்.எஸ்.ஐ. (இன்டகிரேடட் சிப்ஸ்) வரையிலும், சிக்னல் புராசசிங், இமேஜ் புராசசிங், எலெக்ட்ரோ மேக்னடிக் பீல்ட்ஸ், கம்ப்யூட்டர் போன்றவற்றை மாணவர்கள் பி.இ. படிப்பில் படிப்பார்கள்.
தங்களுடைய ஆர்வத்தைவிட இதிலுள்ள வேலைவாய்ப்புகளுக்காகவே நிறைய மாணவர்கள் இந்தப் படிப்பைத் தேர்வு செய்கின்றனர். கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் கவனம் வேண்டும்: பல மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதாலேயே இந்தப் பிரிவை மாணவர்கள் தேர்வு செய்யக் கூடாது.
இ.சி.இ. பிரிவுக்கு சிறந்த ஆய்வக வசதிகள் தேவைப்படும். 20 முதல் 25 ஆண்டுகள் வரை உள்ள கல்லூரிகளில் ஆய்வக வசதிகள் ஓரளவு முழுமையாக இருக்கும். சற்று புதிய கல்லூரிகளில் சேரும்போது ஆய்வகங்கள் சிறப்பாக உள்ளனவா என்பதை அங்குப் படிக்கும் மாணவர்களிடம் உறுதிசெய்துகொண்டு சேர வேண்டும்.
இன்டெல், டி.ஐ. போன்ற எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு 4 ஆண்டுகளில் மாணவர்களின் ஒட்டுமொத்த சராசரி கூட்டு மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். எனவே, இந்தப் படிப்பைத் தேர்வு செய்ததோடு நிற்காமல், தொடர்ந்து சிறப்பான முறையில் தேர்ச்சியும் பெற வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

