சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவித்த 83 பக்தர்கள் தமிழகம் திரும்பினர்

உத்தரகண்ட் மாநிலத்தில் மழை-வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களில் 83 தமிழக பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Updated On :22 ஜூன் 2013, 7:04 am

உத்தரகண்ட் மாநிலத்தில் மழை-வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களில் 83 தமிழக பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக, அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதாரநாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக திரும்பி வர முடியாமல் சிக்கித் தவித்தனர்.

அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் பக்தர்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில், தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு சிறப்புப் பிரதிநிதியின் தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் தில்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர், தமிழ்நாடு வருவாய்த் துறைச் செயலாளர் மற்றும் மாநில நிவாரணம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழு உத்தரகண்ட் மாநில தலைமை நகரான டேராடூனுக்கு உடனடியாக சென்று அவர்களை மீட்டு தமிழகத்திற்கு விமானம் மூலம் அழைத்து வர முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த 83 பக்தர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு, தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உணவு வசதியுடன் தங்க வைக்கப்பட்டதுடன், தமிழக அரசு செலவில் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதியம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் அவர்களை முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

உணவு, இலவச பஸ் பயணம்: சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 83 பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த 67 பக்தர்கள் 4 சிறப்பு பஸ்கள் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள 16 பக்தர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு கட்டணமில்லாமல் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

முதல்வருக்கு நன்றி...

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால், சென்னை விமான நிலையம் வந்த தமிழக பக்தர்கள், யாத்திரை சென்ற போது இயற்கை இடர்பாட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை தமிழக அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் எஸ்.பி.சண்முகநாதனிடம் எடுத்துக் கூறினர்.

தங்களுக்கு உணவு, தங்குமிடம் அளித்ததோடு விமானம் மூலம் உடனடியாக தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுத்தமைக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பக்தர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.