சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசு பஸ் நிலையங்களில் ரூ.10 விலையில் அம்மா மினரல் வாட்டர்

சென்னை மற்றும் புறநகரங்களில் உள்ள பஸ் நிலையங்களில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Updated On :22 ஜூன் 2013, 5:23 am

சென்னை மற்றும் புறநகரங்களில் உள்ள பஸ் நிலையங்களில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்கென சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய தனி உற்பத்தி நிலையம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுற்று, பெட்ரோலியப் பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து கொண்டே செல்கின்றன.

இதன் விளைவாக ஏழை, நடுத்தர மக்கள் செய்வதறியாது விழி பிதுங்கி தவித்து வருகிறார்கள். விலைவாசி என்னும் கொடூரத்திலிருந்து மக்களை காக்கும் வகையில், தமிழக மக்களை வாழவைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

எண்ணற்ற திட்டங்கள்: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாதத்துக்கு 20 கிலோ விலையில்லா அரிசி, அமுதம் அங்காடிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலமாக வெளிச் சந்தையில் ரூ.20-ல் ஒரு கிலோ அரிசி, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பாமாயில் ரூ. 25-க்கும், ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், உளுத்தம் பருப்பு ரூ.30-க்கும் வழங்கப்படுகிறது.

விவசாயிகளின் வாங்கும் சக்தியை ஊக்குவிக்கும் வகையில் சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.50, சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.70 வழங்கப்படுகிறது.

தாய்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி அறவே ரத்து, ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் வயிறார உண்ணும் வகையில் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் அம்மா உணவகங்கள், காய்கறி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் என பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எனது தலைமையிலான அரசால் விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளன.

ரூ.10-க்கு பாதுகாப்பான குடிநீர்: ஏழை, எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் "அம்மா மினரல் வாட்டர்' உற்பத்தி நிலையங்களை அமைத்திட நான் உத்தரவிட்டுள்ளேன்.

முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில், அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். மினரல் வாட்டர் தயாரிப்பதற்குத் தேவையான இயந்திரங்கள் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும்.

இந்த நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1 லிட்டர் திறன் கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்களிலும், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும்.

ரயில்வே தண்ணீரை விடக் குறைவு: ரயில்வே நிர்வாகத்தால் ரூ.15-க்கும், தனியார் நிறுவனங்களால் ரூ.20-க்கும் விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர், அரசுப் போக்குவரத்து கழக நிறுவனங்களினால் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும்.

இந்த அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான வரும் செப்டம்பர் 15- ஆம் தேதியன்று தொடங்கப்படும். தண்ணீர் விற்பனையும் அன்றைய தினமே துவங்கும்.

இதனைத் தொடர்ந்து, மேலும் ஒன்பது இடங்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.