சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விக்ரம் அகர்வாலின் ஹோட்டல்களில் தங்கியவர்கள் விவரம் சேகரிக்கிறது சி.பி.சி.ஐ.டி.

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக, விக்ரம் அகர்வாலின் ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்கள் குறித்த விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திரட்டி வருகிறார்கள்.

Updated On :2 ஜூன் 2013, 7:44 am

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக, விக்ரம் அகர்வாலின் ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்கள் குறித்த விவரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திரட்டி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக பலரை போலீஸார் கைது செய்து வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த நடிகர் விண்டூ தாராசிங் கைது செய்யப்பட்டு, அவரிடம் மும்பை போலீஸார் நடத்திய விசாரணையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் உறவினர் குருநாத் மெய்யப்பனுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மும்பை போலீஸார் குருநாத்தை கைது செய்தனர். பின்னர் சென்னை தேனாம்பேட்டை செனடாஃப் சாலை 2-ஆவது தெருவில் உள்ள குருநாத் வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். இச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.

குருநாத்திடமும், தாராசிங்கிடமும் நடத்திய விசாரணையில் சென்னை அடையாறு போர்ட் கிளப் சாலையில் வசிக்கும் பிரபல ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு தொடர்பு இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இவர்தான் குருநாத்துக்கு, நடிகர் விண்டூ தாராசிங் மற்றும் சூதாட்டத் தரகர்களை அறிமுகப்படுத்தினார் என்று தெரிகிறது.

அதோடு மட்டுமன்றி தனது ஹோட்டலிலேயே சூதாட்டத் தரகர்கள் அனைவரையும் சந்திக்க வைத்ததாகவும் கூறப்பட்டது. ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ள கிட்டி என்ற உத்தம் சி. ஜெயினுடன் இணைந்து இவர் இங்கு சூதாட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து, விக்ரம் அகர்வாலை விசாரணைக்கு மே 30-ஆம் தேதிக்குள் வருமாறு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சம்மன் அனுப்பினர். இதற்கிடையே மும்பை போலீஸார் விக்ரம் அகர்வாலின் வீட்டில் கடந்த திங்கள்கிழமை சோதனை செய்தனர்.

இந்நிலையில், விக்ரம் அகர்வால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு, வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. அதேவேளையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விதித்திருந்த கெடு வியாழக்கிழமையோடு முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து அன்று மாலையில் அவரைப் போலீஸார் தேடத் தொடங்கினர். இதையடுத்து, மும்பை போலீஸாரிடம் விக்ரம் அகர்வால் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், விக்ரம் அகர்வாலுக்கு சொந்தமாக நீலாங்கரை கிழக்கு கடற்கரைச் சாலையில் மற்றொரு ஹோட்டல் இருப்பது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை நண்பகல் அந்த ஹோட்டலில் மும்பை போலீஸாரும், சி.பி.சி.ஐ.டி. போலீஸாரும் இணைந்து சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் அங்கிருந்து கணக்குப் பதிவேட்டையும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த சில காட்சிகளையும் பறிமுதல் செய்தனர். போலீஸார் பறிமுதல் செய்த அந்தக் காட்சியில் சில முக்கியப் பிரமுகர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் விக்ரம் அகர்வாலின் இரண்டு ஹோட்டல்களிலும் தங்கியிருந்தவர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய லெட்ஜர் புத்தகங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதிலுள்ள விவரங்களை வைத்து போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.