சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

25 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஓவிய ஆசிரியர்கள் என

Updated On :22 மே 2013, 8:44 am

தமிழகம் முழுவதும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஓவிய ஆசிரியர்கள் என சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த ஆண்டு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இடமாறுதல் கோரும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கடந்த வாரம் பெறப்பட்டன. அதன்படி மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரியிருந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் ஆன்-லைன் மூலம் பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 20 முதல் 29 வரை நடத்தப்படுகிறது.

கல்வியாண்டுக்கு இடையில் ஆசிரியர்கள் மாறுதல் ஆகாத வகையில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே திட்டமிட்டு நடத்தப்படுகிறது. பள்ளிகள் தொடங்கும் முன்பே காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதால் கல்விப் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

சென்னையில் காலிப்பணியிடம் இல்லை: சென்னை மாவட்டத்தில் பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடம் எதுவும் இல்லை. கடந்த டிசம்பரில் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதால் பெரும்பாலான மாவட்டங்களில் தமிழ், கணிதம், அறிவியல் பாடங்களில் பட்டதாரி ஆசிரியர் இடங்கள் காலியில்லை. அதே நேரத்தில், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களில் பல மாவட்டங்களில் காலியிடங்கள் உள்ளன.

தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு: மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. தகுதிவாய்ந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களில் 840 பேர் இடமாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 645 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.

அனைத்து இடங்களும் நிரம்பின: மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் 745 பேரும், நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு 14 பேரும் பங்கேற்றனர்.

இதில் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களில் காலியாக இருந்த 483 பணியிடங்கள், 14 நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 497 தலைமையாசிரியர்கள் பணியிடங்கள் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. 80 பேர் பல்வேறு காரணங்களால் பதவி உயர்வு வேண்டாம் என மறுத்துவிட்டனர்.

இந்தக் கலந்தாய்வின் மூலம் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. இந்த 497 பேரும் ஜூன் 3-ஆம் தேதி பொறுப்பேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயர் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு...அந்தந்த மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டமும் பணியிட மாறுதல் கோரியிருந்த உயர் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (மே 22) நடைபெறுகிறது.

வரும் வியாழக்கிழமை (மே 23) முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. மே 27, 28, 29 தேதிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இடமாறுதல் கலந்தாய்வுகள், பதவி உயர்வு கலந்தாய்வுகள் அனைத்தும் ஆன்-லைன் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் சென்னைக்கு வந்து செல்லும் அலைச்சல் இல்லை.  பெரும்பாலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்  கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்தக் கலந்தாய்வு முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்டங்களில் மேற்பார்வை செய்து வருகின்றனர்.