சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேமுதிக எம்.எல்.ஏ. வீட்டில் போலீஸார் திடீர் சோதனை

நில ஆக்கிரமிப்பு வழக்கில் முன் ஜாமீன் ரத்தானதையடுத்து தலைமறைவாக உள்ள திருத்தணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. மு.அருண்சுப்பிரமணியம் வீட்டில் வியாழக்கிழமை போலீஸார் தீடீர் சோதனை மேற்கொண்டனர்.

Updated On :12 ஏப்ரல் 2013, 8:33 am

நில ஆக்கிரமிப்பு வழக்கில் முன் ஜாமீன் ரத்தானதையடுத்து தலைமறைவாக உள்ள திருத்தணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. மு.அருண்சுப்பிரமணியம் வீட்டில் வியாழக்கிழமை போலீஸார் தீடீர் சோதனை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான வரதராஜநகரில் இருந்த நிலத்தை கடந்த 1994, 96-ம் ஆண்டுகளில் அப்பகுதி இருளர் இன மக்களுக்கு தலா 3 சென்ட் வீதம் அரசு தரப்பில் வழங்கப்பட்டது.

இந்த நிலத்துக்கு செல்வதற்கான வழியை திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ.வும், தேமுதிக மேற்கு மாவட்டச் செயலாளருமான மு.அருண்சுப்பிரமணியம் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.

அதன் பேரில், கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பார்த்தசாரதி, இது தொடர்பாக திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து எம்.எல்.ஏ. மு.அருண்சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. வைத்தியலிங்கம், மு.அருண்சுப்பிரமணியத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனை தள்ளுபடி செய்ய வேண்டும் என ரிட் மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பான வழக்கில், கடந்த 8-ம் தேதி அவரது முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அன்று முதல் எம்.எல்.ஏ. மு.அருண்சுப்பிரமணியம் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், அவர் கடைசியாக பயன்படுத்திய கார் வியாழக்கிழமை காலை மணவாளநகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், திருவள்ளூர் டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையிலான போலீஸார் எம்.எல்.ஏ. அருண்சுப்பிரமணியத்தின் வீட்டில் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் அங்கு அவர் இல்லாததால் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்திவிட்டு திரும்பினர்.

இச்சம்பவத்தால் மணவாளநகரில் பரபரப்பு ஏற்பட்டது.