மத்திய அரசின் ஊழல்கள் குறித்து பேச ஆரம்பித்தால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மன உளைச்சலுடன் பேரைவயிலிருந்து வெளியே செல்ல வேண்டியிருக்கும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின்போது இது குறித்து நடைபெற்ற விவாதம்:
காங்கிரஸ் உறுப்பினர் எஸ். விஜயதரணி (விளவங்கோடு): உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே. பாலபாரதி (திண்டுக்கல்): ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவைக் கொண்டு வராத காங்கிரஸ் கட்சியினர், சட்டப்பேரவையில் ஊழல் குறித்து பேசுவது அவர்களின் இரட்டை நிலையைக் காட்டுகிறது. ஊழல் பற்றி பேச காங்கிரஸ் கட்சியினருக்கு எந்தத் தகுதியும் இல்லை.
விஜயதரணி: இடதுசாரி கட்சிகளைப் பற்றி அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களில் சென்று கேட்க வேண்டும். அதிமுகவுக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். எனவே, மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகளை அங்கு எழுப்புங்கள்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி: மத்திய அரசின் ஊழல் குறித்து பேரவையில் பேச வேண்டாம் என்கிறார் காங்கிரஸ் உறுப்பினர். இதன் மூலம் மத்திய அரசின் ஊழலை ஒப்புக் கொண்டதற்காக அவரைப் பாராட்டலாம்.
விஜயதரணி: மத்திய அரசின் ஊழலை நான் ஒப்புக் கொண்டதாக அமைச்சர் கூறுவது கண்டிக்கத்தக்கது. பஸ்களுக்கு மின்னணு டிக்கெட் இயந்திரம் வாங்கியது குறித்த பிரச்னை பேரவையில் இன்று (ஏப்ரல் 1) எழுப்பப்பட்டது. அப்படியெனில் அந்தக் குற்றச்சாட்டை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதாகக் கூறலாமா?
பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. கோபிநாத் (ஓசூர்): மத்திய அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அமைச்சர் கூறுகிறார். ஆதாரத்துடன் அவர் பேச வேண்டும்.
அமைச்சர் கே.பி. முனுசாமி: இதற்கு எதற்கு ஆதாரம்? மத்திய அரசின் அங்கமான மத்திய கணக்குத் தணிக்கைத் துறை மத்திய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழலுக்காக சிறை சென்ற சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தானே? உலகில் எத்தனை மொழிகள் உள்ளதோ, எத்தனை பத்திரிகை உள்ளதோ அனைத்திலும் காங்கிரஸ் அரசின் ஊழல் குறித்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. தொலைக்காட்சிகளில் காங்கிரஸார் செய்த ஊழல் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன.
கே. கோபிநாத்: காங்கிரஸ் கட்சியினரே தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் கே.பி. முனுசாமி: இனி வேறு பிரச்னை குறித்து பேசுவது நல்லது. மத்திய அரசின் ஊழல் குறித்துப் பேசினால் காங்கிரஸ் உறுப்பினர்கள் மனஉளைச்சலுடன் பேரவையிலிருந்து செல்ல வேண்டியிருக்கும். நமது கட்சி இப்படிப்பட்ட கட்சியா என வெட்கப்பட வேண்டியிருக்கும்.
கே. கோபிநாத்: நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காங்கிரஸ் கட்சியைப் பற்றி அமைச்சர் இவ்வாறு பேசுவது சரியல்ல.
அமைச்சர் கே.பி. முனுசாமி. கடந்த 60 ஆண்டுகளாக இதைச் சொல்லிதான் காங்கிரஸ் கட்சியினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதனால்தான் சுதந்திரம் அடைந்ததும் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடுமாறு மகாத்மா காந்தி தீர்க்க தரிசனத்துடன் கூறினார். சாதாரண கூலித் தொழிலாளிகூட சுதந்திரத்துக்காக பாடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்): காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுமாறு மகாத்மா காந்தி ஒருபோதும் கூறவில்லை. அமைச்சர் ஆதாரத்துடன் பேச வேண்டும்.
பாலபாரதி: காங்கிரஸ் கூடஇருந்தே குழிபறிக்கும் கட்சி என இப்போது மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் முலாயம் சிங்கே கூறியிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்): சுதந்திரப் போராட்டத்துக்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது. இப்போது சுதந்திரம் கிடைத்து விட்டது. எனவே, காங்கிரஸ் தேவையில்லை என்று மகாத்மா காந்தியே கூறியுள்ளார். இது வரலாறு. இதற்கு எதற்கு ஆதாரம் என்று கேட்டார்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

