சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்டாலினுக்கும் சிதம்பரத்துக்கும் தெரியாதா?

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை என்று அரசியல் ரீதியாகப் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கும் சம்பவத்தின் பின்னணியில் மத்திய

Updated On :22 மார்ச் 2013, 10:08 am

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை என்று அரசியல் ரீதியாகப் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கும் சம்பவத்தின் பின்னணியில் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக தரப்பு கூறுவதும், சிபிஐ சோதனை நடத்தியது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பதும் இரண்டு தரப்பினரும் உண்மைக்குப் புறம்பாகச் சொல்லி வருவதைத்தான் காட்டுகிறது என்கிறார்கள் விவரம் தெரிந்த வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்.

நடந்திருப்பது சிபிஐ விசாரணையே தவிர சோதனை அல்ல என்பதும், தாங்கள் செய்திருக்கும் தவறை மறைக்க திமுக தரப்பு பிரச்னையை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்பதும்தான் உண்மை நிலை என்கிறார்கள்.

சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட, திடீர் பணக்காரர்கள் மத்தியில் எப்போதுமே விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் வாங்கும் மோகம் காணப்படுவதுண்டு. இதில் முறையாகச் சம்பாதிக்கும் பெரிய தொழிலதிபர்களும், பணக்காரர்களும்கூட அடக்கம்.

வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, அந்தந்தக் காரின் மதிப்புக்கேற்ப 200 முதல் 400 சதவிகிதம்வரை சுங்கவரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக, 2 கோடிக்கு வாங்கப்படும் கார் ஒன்றுக்கு, சுங்கவரி மட்டும் 3 கோடி கட்ட வேண்டிய அளவுக்கு இறக்குமதி விதிகள் மிகக் கடுமையாக உள்ளன.

இந்த விதிகளிலிருந்து தப்பித்து, குறுக்கு வழியில் வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி செய்வதற்கு உதவுவதற்காகவே சில தனிநபர்களும் நிறுவனங்களும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்துக்கும், மத்தியப் புலனாய்வுத் துறையினரால் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு, இப்போது விசாரணையில் இருக்கும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வருவாய்ப் புலனாய்வுத் துறையின் கூடுதல் இயக்குநருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், அவர்தான் சென்னையிலுள்ள பெரிய பணக்காரர்களுக்கு வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி செய்வதற்கு விதிகளின் ஓட்டைகளைச் சொல்லிக் கொடுத்து உதவியதாகவும் கூறப்படுகிறது.

சுங்க விதிகளிலிருந்து தப்பிக்க இவர்கள் பொதுவாகக் கையாளும் குறுக்கு வழி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் கார்களின் அசல் மதிப்பைக் குறைத்துக் காட்டுவது. 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட காரின் மதிப்பை வெறும் 40 லட்சமாகக் காட்டி, அதற்கான வரியைக் கட்டி காரை இறக்குமதி செய்து விடுவார்கள். இதற்கு சுங்க இலாகா அதிகாரிகள் துணை நிற்பார்கள். வருவாய்ப் புலனாய்வுத் துறை, இந்த வரி ஏய்ப்பைக் கண்டும் காணாமலும் இருந்து விடும்.

இன்னொரு வழி, புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய கார் என்று பொய்யான தகவலைக்கூறி, வரியைக் குறைத்து இறக்குமதி செய்வது. இதற்கும் சுங்க இலாகா அதிகாரிகளும், வருவாய்ப் புலனாய்வுத் துறையும் துணை நிற்கும். இந்த அடிப்படையில்தான் இந்தியாவில் மாசரெட்டி, லம்போர்ஜினி, ஹம்மர், பெராரி போன்ற பெரும்பாலான வெளிநாட்டுக் கார்கள் சட்டவிரோதமாக உலவிக் கொண்டிருக்கின்றன.

இப்படி உலவும் கார்களைக் கண்டுபிடித்து அந்தக் கார் உரிமையாளர்களிடம் உரிய சுங்க வரியை வசூலித்து, அபராதம் விதிக்க வேண்டிய வருவாய்ப் புலனாய்வுத் துறை இயக்குநரகத்துடன் இப்படி வாகனம் இறக்குமதி செய்யும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த அலெக்ஸ் ஜோசப் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது வெளியாகியது.

வேடிக்கை என்னவென்றால், கார் இறக்குமதியாளர் அலெக்ஸ் ஜோசப் கைது செய்யப்பட்ட பின்னும், அவர் கடந்த 13 ஆண்டுகளில் 480 கார்களை இறக்குமதி செய்து பல பெரும் பணக்காரர்களுக்கு விற்றிருப்பதும், அதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்ட பிறகும், பெரிய மனிதர்கள் தொடர்பான பிரச்னை என்பதால், வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் விசாரணையில் தொய்வு ஏற்படுத்தியதுதான். அதனால், பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐயின் பூர்வாங்க விசாரணைக்குப் பிறகு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அலெக்ஸ் ஜோசப்பும், வருவாய்ப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரும் சேர்ந்துதான் இந்த வரி ஏய்ப்புக் கார் இறக்குமதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதால், அவர்கள் வீட்டில் முதலில் சோதனைகள் நடத்தப்பட்டன. அந்தச் சோதனையின்போது கிடைத்த தகவலின்படி, 33 வாகனங்கள் வரி ஏய்ப்புடன் இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின.

வரி ஏய்ப்புக்கு உள்ளான வாகனங்களுக்கு உரிய வரியையும், அபராதத்தையும் செலுத்துவதை விட்டுவிட்டு, விசாரணைக்கு வந்த அதிகாரிகளைத் தொண்டர்களை வைத்து மிரட்டுவதும், "சிபிஐ நாய்களே' என்று கோஷமிடுவதும் என்ன நியாயம் என்று கேட்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

அதைவிட வேடிக்கையான விஷயம், தனக்கும் இந்தச் சோதனைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாததுபோல மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருப்பதுதான். வருவாய்ப் புலனாய்வுத் துறை மத்திய நிதியமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. நிதியமைச்சரின் உத்தரவு இல்லாமல் வருவாய் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்லை. அதிலும், இதுபோன்ற அரசியல் முக்கியஸ்தர்கள் தொடர்புள்ள பிரச்னைகளில் வருவாய்ப் புலனாய்வுத் துறையானாலும், சிபிஐ ஆனாலும் மேலிடத்திடம் தெரிவிக்காமல் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாது என்பது ஊரறிந்த ஒன்று.

சோதனைகள் நடக்கத் தொடங்கியவுடன், திமுக தலைவர் கருணாநிதியைத் தொடர்புகொண்டு, தனக்கும் இந்தச் சோதனைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாகக் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

தான் பயணிக்கும் வாகனமேகூட விதிமுறைகளை மீறி, வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனமாக இருக்குமோ என்னவோ என்பதால்தான் மற்றவர்களைப்போல கருணாநிதி இந்தப் பிரச்னையில் அதிகம் கடுமை காட்டவில்லை என்கிறார்கள் வருவாய்ப் புலனாய்வுத் துறையினர். இந்தப் பிரச்னையிலும் தொடர்புடைய அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கருணாநிதி குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

""நான் சாதாரணமாக மற்றொரு துறையின் பணிகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பவனல்ல. ஆனால், இந்த விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைகள் ஏற்கத்தக்கவை அல்ல. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் நான் இதுகுறித்துப் பேசியுள்ளேன்'' என்கிறார் ப. சிதம்பரம்.

ஸ்டாலினுக்குத் தெரியாதா, தானும் தனது மகன் உதயநிதி ஸ்டாலினும் பயன்படுத்தும் வெளிநாட்டுக் கார்கள் வரி ஏய்ப்பு செய்யப்பட்டவை என்று? மத்திய நிதியமைச்சருக்குத் தெரியாமலா, வரி ஏய்ப்பு செய்தவர்கள் வீட்டில் விசாரணையும், பரிசோதனையும் செய்யப்பட்டன?

""சட்டம் தனது கடமையைச் செய்யும்'' என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் அரசியல்வாதிகள், சட்டம் தங்கள்மீது பார்வையைத் திருப்பினால் ஏன் கோபப்படுகிறார்கள்'' என்று கேட்கிறார்கள் சிபிஐ அதிகாரிகள்.