சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சங்கரராமன் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி வெட்டிக் கொலை

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த ரௌடி மா.கதிரவன் (42) வெட்டிக்

Updated On :22 மார்ச் 2013, 7:02 am

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த ரௌடி மா.கதிரவன் (42) வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை கே.கே.நகர் கிரி தெருவைச் சேர்ந்தவர் மா.கதிரவன். இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கதிரவன் தனது சகோதரரோடு அங்கு வசித்து வந்தார்.

கதிரவன் வியாழக்கிழமை காலை ஹைதராபாத் செல்வதற்குப் புறப்பட்டார். இதற்காக விமான நிலையம் செல்வதற்காக தனது காரில் வீட்டை விட்டு வெளியே வந்தார். கார் வீட்டில் இருந்து சில அடி தூரம் சென்றபோது,  எதிரே இரண்டு கார்கள் வந்தன.  அந்த கார்கள், திடீரென கதிரவன் காரை மோதுவது போல மறித்து நின்றன.

கார் நின்றதும் அதில் இருந்து 8  பேர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இறங்கி கதிரவனை நோக்கி வந்தனராம்.  இதைப் பார்த்த கதிரவன் காரில் இருந்து இறங்கி ஓடினார்.

ஆனால், அந்தக் கும்பல் கதிரவனை விரட்டிச் சென்றது.  கதிரவன் அங்குள்ள ஒரு கோயிலுக்கு நுழைய முயன்றபோது, அந்த கும்பல் கதிரவனை வெட்டியது.

பின்னர் அந்தக் கும்பல் காரில் அங்கிருந்து தப்பியோடியது. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கதிரவனை அப் பகுதியினர் மீட்டு, வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால், அங்கு சிறிது நேரத்தில் கதிரவன் இறந்தார். இச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸாரும்,  காவல்துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தனர். 

சம்பவ இடத்தில் இருந்த தடயங்களைப் போலீஸார் சேகரித்தனர். இது தொடர்பாக கதிரவன் கார் டிரைவரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.

 மேலும் இது குறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சங்கரராமன் கொலை வழக்கு குற்றவாளி: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் சில ஆண்டுகளுக்கு முன் கோயிலுக்குள்ளே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கதிரவன் சேர்க்கப்பட்டார்.  இந்த கொலை வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கதிரவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களைப் போலீஸாருக்கு ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில் இறந்த கதிரவன், 2 ஆண்டுகளுக்கு முன்பு பூந்தமல்லி நீதிமன்றம் அருகே சென்ன கேசவன் என்ற ரௌடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூல காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கும்,  மற்றொரு ரௌடி கும்பலுக்கும் இடையே ஒரு நிலப் பிரச்னை தொடர்பாக முன்பகை ஏற்பட்டதாம். இதனால் தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இச் சம்பவத்தால் கே.கே.நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.