கூடங்குளம் அணுஉலையை கடல் வழியாக முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடந்தது. இப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் 700-க்கும் மேற்பட்டோர் 400 பைபர் படகுகளில் சென்று பங்கேற்றனர்.
கூடங்குளம் அணுஉலையை மூடவலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக் குழு சார்பில், இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அணுஉலையை கடற்கரை வழியாகச் சென்று முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தின்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடல் வழியாக படகுகளில் சென்று முற்றுகையிடும் போராட்டத்தை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி நடத்தினர். மனித உரிமைகள் தினமான கடந்த டிசம்பர் 10ஆம் தேதி மீண்டும் கடல்வழியாக முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஜப்பானில் புகுஷிமா அணுஉலையில் வெடிப்பு ஏற்பட்ட 2ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கூடங்குளம் அணுஉலையை மீண்டும் கடல்வழியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டத்தை கடந்த சில நாள்களுக்கு முன்னர் போராட்டக் குழு அறிவித்தது. திட்டமிட்டபடி அப்போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, தோமையார்புரம், கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் சென்றனர். கூடங்குளம் நோக்கி கடல்வழியாகச் சென்ற அவர்கள் அணுஉலையின் பின்புறம் கடலில் நங்கூரமிட்டு முற்றுகையில் ஈடுபட்டனர்.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன், மில்டன், மை.பா.ஜேசுராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் காலை 10 மணியளவில் போராட்டம் நடத்தப்பட்ட கடல் பரப்புக்கு படகுகளில் வந்தனர்.
அவர்கள் அணுஉலையை மூடவலியுறுத்தியும், அணுஉலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியும் கோஷங்களை எழுப்பினர். பல படகுகளில் மீனவர்கள் கருப்புக் கொடி கட்டியிருந்தனர். இம்முறை பைபர் படகுகள் சிலவற்றில் பெண்களும் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஒருசில பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
படகுகளை கடலுக்குள் நிறுத்தும் இடத்தை அடையாளம் காண்பதற்காக போராட்டக் குழுவினர் கயிறுகளில் மிதவைகளையும், சிவப்புக் கொடியையும் கட்டி கடலுக்குள் மிதக்கவிட்டிருந்தனர். அந்த எல்லைக்குள் மரைன் போலீஸாரின் படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஆனால், அந்தப் படகுகளின் அருகில் மீனவர்களின் பைபர் படகுகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற்ற இந்தப் போராட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் நடந்து முடிந்தது.
அதே நேரம் இடிந்தகரையில் போராட்டப் பந்தலில் 574ஆவது நாளாக திங்கள்கிழமை தொடர் போராட்டத்தில் பெண்களும், ஆண்களும் ஈடுபட்டிருந்தனர்.
2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: முற்றுகைப் போராட்டத்தையொட்டி கடற்பகுதியில் 4 ரோந்துப் படகுகளில் மரைன் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆழ்கடலில் கடலோர காவல்படையின் கப்பல் ரோந்து வந்தது. கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடைகள் அடைப்பு: கடல்வழி முற்றுகைப் போராட்டத்தையொட்டி கூடங்குளம் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தெருக்கள் வெறிச்சோடியிருந்தன. கூடங்குளம், விஜயாபதி, இருக்கன்துறை, உதயத்தூர், செட்டிகுளம் கிராமங்களில் முக்கிய சந்திப்புகளிலும், கூடங்குளம் அணுஉலை நுழைவுப் பகுதியிலும் வஜ்ரா வாகனங்களுடன் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் 7 கி.மீ. தொலைவுக்குள் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், ஆள்நடமாட்டம் குறைவாக இருந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

