இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை கூடுகிறது.
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து தாற்காலிகமாக ஒதுங்கியிருந்த சீனிவாசன், இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். இதன்மூலம் சீனிவாசன் மீண்டும் அதிகாரப்பூர்வமாக தலைவர் பதவிக்கு வருவது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், "சீனிவாசன் மீண்டும் பிசிசிஐ தலைவர் பணிக்கு வந்துவிட்டார். அவர் தான் தற்போது தலைவராக உள்ளார். எனவே பிசிசிஐ செயற்குழு கூட்டத்துக்கு தலைமை வகிப்பது யார் என்ற குழப்பத்துக்கு இடமில்லை. அவர்தான் தலைமை வகிப்பார். இப்போது யாரும் சீனிவாசனை ராஜிநாமா செய்யுமாறு வற்புறுத்த முடியாது' என்றார்.
சீனிவாசன் பேச மறுப்பு: பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை மாலை தில்லி வந்த சீனிவாசனிடம் ஊடகங்கள் கேள்வியெழுப்பின. அப்போது பதிலளிக்க மறுத்த சீனிவாசன், "என்னை இங்கிருந்து போகவிடுங்கள். இங்கிருந்து செல்ல எனக்கு உரிமை உண்டு. அதனால் என்னை போகவிடுங்கள்.
இப்போது கேமராவால் என்னை இடித்துவிட்டீர்கள். இதேபோன்று தொடர்ந்து என் மீது இடிக்க முடியாது. இது சரியானதல்ல' என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்று விட்டார்.
ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக விசாரிக்க பிசிசிஐயால் அமைக்கப்பட்ட இருநபர் குழு, சட்ட விரோதமானது, சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தின்போது மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா அல்லது ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக போலீஸாரின் விசாரணை முடியும் வரை காத்திருப்பதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. இதுதவிர, புதிதாக விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தலாமா என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தால் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து தாற்காலிகமாக ஒதுங்கியிருந்தார் சீனிவாசன். ஆனால் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக விசாரித்த இரு நபர் விசாரணைக் குழு, "சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டதால், மீண்டும் பிசிசிஐ தலைவராகியிருக்கிறார் சீனிவாசன்.
பிசிசிஐ தலைவராக சீனிவாசன் ஏற்கெனவே பதவியேற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், அதை யாரும் உறுதி செய்யாமல் இருந்த நிலையில், யார் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று கேள்வியெழுந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை மாலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல்.
எனினும் சீனிவாசன் மீண்டும் தலைவர் பதவிக்கு வருவதை பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை.
பிசிசிஐ செயற்குழுவில் சீனிவாசன் பங்கேற்கும்போது, அதனால் மேலும் சர்ச்சை கிளம்பலாம் என பிசிசிஐ நிர்வாகிகள் கருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
"சீனிவாசன் தலைமை வகித்தால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம்'
தில்லியில் நடைபெறும் பிசிசிஐ செயற்குழு கூட்டத்துக்கு சீனிவாசன் தலைமை வகித்தால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என பிகார் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் செயலர் வர்மா கூறுகையில், "ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட இருநபர் விசாரணைக்குழு சட்ட விரோதமானது என மும்பை நீதிமன்றம் கூறிவிட்டது.
எனவே செயற்குழுவுக்கு தலைமை வகிக்க சீனிவாசனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஒருவேளை அவர் தலைமை வகித்தால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம். அவர் தலைமை வகித்தால், அது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்' என்றார்.
ஸ்பாட் ஃபிக்ஸிங் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்
ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் குறித்து புதிய விசாரணைக் குழுவை அமைத்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சமீபத்திய காலங்களில் கிரிக்கெட் வாரியத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அவப்பெயரை நீக்கி, கிரிக்கெட் வாரியத்தின் புகழை மீண்டும் நிலைநாட்ட நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும்.
எனவே இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் சட்டநிபுணர்கள் குழு மிகவும் கவனமாக ஆராய்ந்து முறையான ஆலோசனைகளை வழங்கும். கண்டிப்பாக புதிய விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். பிசிசிஐ செயற்குழு கூட்டம் மற்றும் ஐபிஎல் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஆகியவை முடியும் வரை காத்திருப்போம்' என்றார்.
ராஜீவ் சுக்லா தலைமையில் ஐபிஎல் ஆட்சிமன்ற குழு கூட்டம்?
ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்துக்கு ராஜீவ் சுக்லா தலைமை வகிக்கலாம் என்று தெரிகிறது.
ஐபிஎல் அமைப்பின் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா, ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தைத் தொடர்ந்து அந்தப் பதவியை ராஜிநாமா செய்தார். எனினும் அவருடைய ராஜிநாமா இதுவரை பிசிசிஐயால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும் தனது பதவிக்காலம் முடியும் வரை அந்தப் பதவியில் சுக்லா தொடர்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இது தொடர்பாக சுக்லா கூறுகையில், "ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்துக்கு தலைமை வகிக்குமாறு என்னை கேட்டார்கள் என்றால், அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எனினும் தலைவர் பதவியை நான் தொடர்வேனா என்பதில் தற்போது கேள்விக்குறியே தொடர்கிறது' என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

