சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாமக்கல்லில் 3 அரசுப் பள்ளிகள் நூறு சதம் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகள் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளதுடன்,

Updated On :11 மே 2013, 5:50 pm

பிளஸ் 2 பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகள் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், அரசுப் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 6.23 சதம் உயர்ந்துள்ளது. அரசுப் பள்ளிகளை நூறு சதம் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிக்கு இந்தப்  பலன் கிடைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2011-2012ஆம் கல்வியாண்டில், 76 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 9581 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர்.

அதில், 7678 பேர் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 80.14 சதத்தை எட்டியது. இருப்பினும், ஒரு அரசுப் பள்ளிகூட நூறு சதம் தேர்ச்சியை பெறவில்லை. தவிர, கொல்லிமலையிலுள்ள செங்கரை அரசு மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியில் தேர்வு எழுதிய 8 மாணவர்களும் தோல்வியடைந்ததுடன், வாழவந்தி நாடு பகுதியிலுள்ள வல்வில்ஓரி உண்டு உறைவிடப் பள்ளியில் தேர்வு எழுதிய 50 மாணவர்களில் 18 பேரும், புதுவளவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 29 மாணவர்களில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

ஆண்டு தோறும் மாநில அளவிலான மதிப்பெண்களை பெற்று நாமக்கல் மாவட்டம் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த  மாவட்ட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி நிலை மிகவும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறச் செய்திட பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2012-2013ஆம் கல்வியாண்டு முழுவதும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் அமைப்பு முறை குறித்த மாதிரி படிவம் அனைத்து அரசுப் பள்ளி வகுப்பறைகளிலும் ஒட்டப்பட்டதுடன், அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்சம் 70 மதிப்பெண்கள் பெறுவதற்கான சூட்சமத்தை விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டன.

இது தவிர, மெல்ல கற்கும் மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் எனப் பிரித்து அவர்களுக்கு தனித் தனியாக சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டன. இதன் பலனாக, இந்தாண்டு தேர்வு எழுதிய 77 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 9866 மாணவ, மாணவிகளில் 8521 பேர் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.37 சதத்தை எட்டியுள்ளது. 

தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டைவிட 6.23 சதம் உயர்ந்துள்ளது. தவிர, ஜேடர்பாளையம், புதுச்சத்திரம், தண்ணீர்பந்தல்பாளையம் ஆகிய 3 அரசுப் பள்ளிகள் நூறு சதம் தேர்ச்சியை பெற்றுள்ளதுடன், கொல்லிமலை அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி பெருமளவில் உயராவிடினும் இந்த வளர்ச்சி தொடக்கமாக அமைந்துள்ளது என்று முதன்மைக் கல்வி அலுவலர் வை.குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

அனைத்து அரசுப் பள்ளிகளும் நூறு சதம் தேர்ச்சி பெறாவிடினும் தேர்ச்சி விகிதம் 6.23 சதம் உயர்ந்திருப்பது இமாலய சாதனையாக கருதுகிறோம். இதற்காக தீவிரமாக உழைத்த ஆசிரியர்களை பாராட்டுகிறோம்.

இந்த முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் போது அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகள் 90 சதத்துக்கு மேல் தேர்ச்சியை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கொல்லிமலை பள்ளிகளைப் பொறுத்தவரை ஆதிதிராவிடர் நலத் துறை கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான ஆசிரியர்களை நியமிக்கும்பட்சத்தில் தேர்ச்சி விகிதம் மேலும் உயரக்கூடும்.

இருப்பினும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் அந்தப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு இந்த தேர்ச்சி காட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.