சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மெய்யாலுமா..?

2ஜி தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் உள்ள உறுப்பினர்களில் 2 பேருடைய பதவிக்காலம் முடிவடைந்திருக்கிறது.

Updated On :12 ஜூலை 2013, 7:18 am

2ஜி தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் உள்ள உறுப்பினர்களில் 2 பேருடைய பதவிக்காலம் முடிவடைந்திருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவாவுக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர் அதிமுகவினராக இருக்கக் கூடாது என்பதில் திமுக பிடிவாதமாக இருக்கிறதாம். கூட்டுக் குழுவின் தலைவர் சாக்கோவானால் உறுப்பினர்களை நியமிக்காமல் கூட்டுக் குழு கூட்டத்தைக் கூட்டுவதில்லை என்று அடம்பிடிக்கிறாராம். ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவும் கிடைத்திருக்கும் நிலையில் 2ஜி தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கையைத் தேர்தலுக்கு முன்பு தனக்குச் சாதகமாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிட வேண்டும் என்று அவசரப்படுகிறதாம் அரசு. உறுப்பினராக அதிமுகவை நியமிப்பதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறதாமே அரசுத் தரப்பு, மெய்யாலுமா?

===

அம்மாவுக்கு மட்டும் ஏதாவது நடந்தால்!' என்று மூத்த வாரிசும், மூத்த மகளும் மூத்த தலைவரை எச்சரித்திருக்கிறார்களாம். பெண் வாரிசின் தேர்தலை வெற்றிகரமாக நடத்திவிட்டோமே என்று சற்று ஆசுவாசப்படக்கூட அவகாசம் இல்லாமல், சோனியாவின் தயாளத்தையும், கருணையையும் எதிர்பார்த்துக் கலக்கத்தில் இருக்கிறதாமே கட்சித் தலைமை, மெய்யாலுமா?

===

அந்தத் துறையில் ஆளுக்கு ஆள் "வெள்ளாமை' பார்த்துக் கொண்டிருந்தனர். துறையின் செயலாளருக்கே போக்குக் காட்டும் அளவுக்குப் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் அந்தத் துறை ஊழியர்கள். ஆட்சிகள் மாறும், அமைச்சர்கள் மாறுவார்கள், செயலர்கள் மாறுவார்கள். ஆனால், அரசுப் பணத்தை சாமர்த்தியமாக "வாய்க்கால் வெட்டி'த் திருப்பிவிடும் தொழில்நுட்பம் தெரிந்த ஊழியர்கள் மட்டும் மாறவே மாட்டார்கள்.

அப்படிப்பட்ட துறையின் கூடுதல் பொறுப்புத் தரப்பட்ட அந்த அதிகாரி செயல்படத் தொடங்கியதுதான் தாமதம், "ஊடு பயிர் வளர்த்து சம்பாதிப்பது போல' பணம் பார்த்து வந்த அத்தனை பேரும் பேயறைந்தாற்போல ஆடிப் போய் விட்டார்களாம். "முருகா, முருகா எங்கிருந்தய்யா வந்தான் இந்தாள்' என்று புலம்பத் தொடங்கி விட்டார்களாம். சமீபத்தில் அந்த அதிகாரியிடமிருந்து கூடுதல் பொறுப்பு அகற்றப்பட்ட செய்தி வந்ததும், பலர் துள்ளிக் குதிக்காத குறையாம். விடுமுறை என்றும் பாராமல் சனிக்கிழமை பெரிய விருந்து வைத்துக் கொண்டாடினார்களாமே, மெய்யாலுமா?

===

காவல்துறையைச் சேர்ந்த பெண்மணிக்கும் நீதித்துறையைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே இருந்த தொடர்பு சிறுவாணித் தண்ணீர் பாயும் பகுதிகளில் சிரிப்பாய் சிரிக்கிறது. நீதியின் பிடியில் சிக்காமல் சட்டமும், சட்டத்தின் உதவியில்லாமல் நீதியும் கிடையாது என்பது உலகறிந்த ரகசியம். கைது, பரபரப்பு, பரஸ்பரக் குற்றச்சாட்டு இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

கடந்த ஓராண்டில் சட்டத்திற்கும் நீதிக்கும் இடையே நடந்த செல்போன் பேச்சு மற்றும் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்திப் பரிமாற்றங்களைத் திரட்டிய காவல்துறையினர் திகைத்துப்போய் நிற்கிறார்கள். ஐயாயிரத்துக்கும் அதிகமாக செல்போன் பேச்சுகள் நடந்திருக்கின்றன. ஆறாயிரத்துக்கும் அதிகமான குறுஞ்செய்திப் பரிவர்த்தனைகள் நடந்தேறி இருக்கின்றன. இவையெல்லாம் தாக்கல் செய்யப்பட்டால் கேவலப்படுவது காக்கியா, கறுப்புக் கோட்டா என்று கேட்டால், இரண்டுமேதான் என்கிறதாமே காவல்துறை, மெய்யாலுமா?

===

கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் உடன்பிறப்புகள். இரண்டு எழுத்து இனிஷியலுடனான இரண்டெழுத்து உறுப்பினர் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல என்று சொல்லிச் சலித்துக் கொள்கிறார்கள். தங்களை வேலைக்காரர்களை நடத்துவதுபோல நடத்துகிறார் அவர் என்று குமுறிக் கொண்டிருப்பவர்களில் பலருக்கும் தயையும், நிதியும் அளித்து சமாதானப்படுத்தி வைத்திருக்கிறாராம் அந்த முன்னாள் அமைச்சர். அவரிடம் நெருக்கம் காட்டாவிட்டாலும், தொலைத்தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெருவாரியானவர்கள் என்று சொல்லப்படுகிறதே, மெய்யாலுமா?

===

முதல்வர் வீட்டுக்குப் பின்னால் உள்ள சமூகநலக் கூடத்தில் சமூகநலத் துறையின் வளைகாப்பு நிகழ்ச்சி. கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நடத்தி, புடவை, வளையல் எல்லாம் கொடுப்பது வழக்கம். இதில் கலந்துகொண்ட நூறு பேரில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இரண்டு, மூன்று குழந்தைகளைப் பெற்றவர்களாமே? எண்ணிக்கை வேண்டும் என்பதற்காக அங்கே இங்கே இருந்தெல்லாம் கர்ப்பிணிப் பெண்களைத் தேடிப்பிடித்து நிகழ்ச்சி நடத்தினார்களாமே? மாநிலம் முழுவதும் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சிகள் இப்படித்தான் நடக்கிறது என்று கூறப்படுகிறதே, மெய்யாலுமா?

===

அந்தக் கட்சி ஜாதிக் கட்சி அல்ல என்று காட்டிக் கொள்வதற்காகத் தாழ்த்தப்பட்ட இனத்தவர்தான் கட்சியின் பொதுச் செயலாளராக வேண்டும் என்பது சட்டதிட்டம். "வந்துட்டான்யா, வந்துட்டான்' என்று சொன்னால் நினைவுக்கு வரும் நகைச்சுவை நடிகரின் பெயரையும், ராமாயண வில்லனின் பெயரையும் சேர்த்துப் படித்தால் அந்தக் கட்சியின் இப்போதைய பொதுச் செயலாளர் பெயர் வரும். சித்ரா பௌர்ணமி இரவு விழாவைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின்போதும், அதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் தலைமறைவாகிவிட்டார் அவர் என்று கட்சியில் அவர்மீது எல்லோருக்கும் கோபமோ கோபம்.

அவரைக் கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செயல்வீரர் குரலெழுப்புகிறார். அப்படிச் செய்தால் கட்சிக்கு மேலும் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்று பயப்படுகிறது தலைமை. கலவரத்துக்குக் காரணமே "நட்சத்திரக் கொடி போட்ட கட்சிதான்' என்று குற்றம் சாட்டும் புத்தகம் ஒன்றை எழுதும்படி அந்தப் பொதுச் செயலாளருக்குக் கட்டளை இடப்பட்டிருக்கிறதாம். "கட்சிக்காரனைப் பகைத்துக் கொள்வதா, ஜாதிக்காரனைப் பகைத்துக் கொள்வதா' என்கிற குழப்பத்தில் இருக்கிறாராமே அவர், மெய்யாலுமா?

===

இன்றைய சர்வதேசக் கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பெயர் மொகன்னத் அப்துல் ரஹீம் கர்ரர். இராக்கைச் சேர்ந்த இந்தக் கால்பந்தாட்டக்காரரிடம்,அவர்களது நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் யூனுஸ் மொகம்மதுக்கு பதிலாக விளையாட அழைப்பு வந்தது. அவரது விசிறியான நான் அவருடன் விளையாட ஆசைப்படுகிறேனே தவிர அவருக்குப் பதிலாக விளையாடத் தயாராக இல்லை என்று மறுத்துவிட்டார். கடைசியில், 2013-க்கான வளைகுடா நாடுகளுக்கிடையேயான கால்பந்தாட்டப் போட்டியின் யூனுஸ் மொகம்மதுடன் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்துல் ரஹீமின் சிறப்பு என்னவென்றால், இரண்டு கால்களாலும் பந்தை உதைத்து கோல் போடும் திறமைசாலி என்பதுதான்.

ராணிப்பேட்டையின் நஷ்டம், ஆவடியின் அதிர்ஷ்டம் என்று ஆளும் கட்சி வட்டாரங்களில் விளையாட்டாகப் பேசுவது இருக்கட்டும். சிவப்பு விளக்குக் காரும், கொடியும் கிடைத்துவிட்டாலும் இன்னும் சரியான உதவியாளர் அவருக்கு அமையவில்லையாம். தலைமைச் செயலக வளாகத்தில் யார் யாரோ அந்த அமைச்சரின் உதவியாளராக வேலை பெற்றுத்தர மூன்று விரல்களை நீட்டிப் பேரம் பேசுகிறார்களாமே! லட்சியம் அதுவானால் லட்சங்கள் பற்றிக் கவலைப்படலாமா என்று வேதாந்தம் வேறு பேசுகிறார்களாமே, மெய்யாலுமா?