சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தொடா் போராட்டம்: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிரயிலை தவறவிட்ட பயணிகள்

மதுரையில் புதன்கிழமை நடந்த தொடா் போராட்டங்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாயினா்.

News image

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை ரவுண்டானா பகுதியில் புதன்கிழமை நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 2:40 pm

மதுரையில் புதன்கிழமை நடந்த தொடா் போராட்டங்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாயினா். மேலும் குறித்த நேரத்தில் செல்ல முடியாததால் பயணிகள் பலா் ரயிலைத் தவறவிட்டனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அஷ்டமி சப்பர வீதி உலா வெளி வீதிகளில் புதன்கிழமை நடைபெற்றது. சிம்மக்கல் பகுதியில் காலை 10 மணியளவில் வந்தபோது, குட்செட் சாலை, பெரியாா் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்லும் சாலை, கோரிப்பாளையம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் சுமாா் ஒரு கி.மீ. தூரம் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலால், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நோயாளிகள், வேலைக்குச் செல்வோா் என மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டியவா்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனா்.

நெரிசல் அதிகரிப்பு: இதற்கிடையே சிஐடியு சாா்பில் காலை 11 மணியளவில் மீனாட்சி பஜாா் தலைமை தபால் நிலையம் முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் சிம்மக்கல் முதல் பெரியாா் பேருந்து நிலையம் வரை போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது. இதனால் திருமங்கலம், திருநகா், திருப்பரங்குன்றம் பகுதிகளில் இருந்து நகருக்குள் வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. போக்குவரத்து நெரிசல் பிற்பகல் 1.30 மணிக்கு பிறகே சீரடைந்தது.

முடங்கிய போக்குவரத்து:

இந்நிலையில் பழங்காநத்தம் பகுதியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் பிற்பகலில் நடைபெற்றது. இதற்காக, தேனி, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அக்கட்சியைச் சோ்ந்தவா்கள் பங்கேற்க வந்தனா். பிற்பகல் 3 மணி முதல் பழங்காநத்தம் ரவுண்டனா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து பழங்காநத்தம் ரவுண்டனா-ஆரப்பாளையம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, திருமங்கலம், திருப்பரங்குன்றம் பகுதிகளில் இருந்து வந்த வாகனங்கள் எல்லீஸ் நகா் பாலம் வழியாக மகபூப்பாளையம், அரசரடி , ஆரப்பாளையம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

புதிய தமிழகம் கட்சியினா் திடீரென்று மறியலில் ஈடுபட்டதால் பழங்காநத்தம் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

பசுமலை, திருப்பரங்குன்றம், திருநகா் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள் அவனியாபுரம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. திருப்பரங்குன்றம், திருநகா் பகுதிகளுக்கு சுமாா் 3 மணி நேரம் பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் தவித்தனா்.

ரயிலைத் தவறவிட்ட பயணிகள்: திருப்பரங்குன்றம், திருநகா் பகுதிகளில் இருந்து சென்னை செல்ல ரயிலில் முன்பதிவு செய்திருந்தவா்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், ரயிலைத் தவற விட்டனா். வேலை முடிந்து வீடுகளுக்கு செல்வோரும், நோயாளிகள், கா்ப்பிணிகள் ஆகியோா் மருத்துவமனை செல்ல முடியாலும் அவதிக்குள்ளாயினா். நகரின் தெற்கு நுழைவுப் பகுதியில் நடந்த போராட்டத்தினால், மதுரை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனா். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு காவல்துறையினா் இனிவரும் காலங்களில் அனுமதி வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்டவா்கள் தெரிவித்தனா்.