சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாதனை மாணவர்களின் வேதனை

தமிழகத்தின் முன்னணி மாணவர்களின் முதல் தேர்வு மருத்துவக் கல்வியே. அதற்குப் பிறகே, அடுத்த பிரிவுகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 8:40 am

தமிழகத்தின் முன்னணி மாணவர்களின் முதல் தேர்வு மருத்துவக் கல்வியே. அதற்குப் பிறகே, அடுத்த பிரிவுகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவக் கல்வியில் தகுதி அடிப்படையில் சேர்ந்த மாணவர்கள் "சாதனை மாணவர்கள்' என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகரித்த அளவிற்கு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்காமல் போனதற்கு முக்கிய காரணம், மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி போதிக்கும் முதுநிலைப் பேராசிரியர்களின் பற்றாக்குறையே. இத்தகைய முதுநிலைப் பேராசிரியர்கள் திடீரென்று பெருகப் போவதும் இல்லை. இனி வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிகமாகவும் போவதில்லை. எனவே இன்னும் பல ஆண்டுகளுக்கு எம்பிபிஎஸ் - மருத்துவப் படிப்பிற்கு மவுசு குறையப் போவதில்லை.

மேலும் இந்த ஆண்டு தமிழகத்தில், மருத்துவப் படிப்பு படிக்கவிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது மகிழ்ச்சிகரமான செய்தி என்றாலும், வரும் ஆண்டுகளில் இதுபோன்று எண்ணிக்கை அதிகரிப்பது சாத்தியமில்லாத ஒன்று.

இந்த நிலையில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, 18 அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான 1,823 மருத்துவ இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, கடந்த மாதம் 18-7-2013 அன்று தொடங்கி, 22-7-2013 வரை சென்னையில் நடந்தது. முதல்கட்ட கலந்தாய்வில் தகுதி அடிப்படையில், கல்லூரியின் தர அடிப்படையில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 410 கூடுதல் இடங்களுக்கும், 10 சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள 714 இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 5-8-2013 தொடங்கி 16-8-2013 வரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக, 5-8-2013 அன்று நடந்த கலந்தாய்வில், சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கூடுதல் இடங்களுக்கு, ஏற்கெனவே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு முதலில் நடந்தது. இதில் தாங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க, மாணவர்களும் - பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்த மறு ஒதுக்கீடு - இட மாறுதல் கலந்தாய்வில் 857 மாணவர்களுக்கு இடமாறுதல் கிடைக்கப் பெற்று, விரும்பிய கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவதால், இந்த 857 மாணவர்களும் வருகின்ற 19-8-2013 அன்று புதிய கல்லூரியில் சேர வேண்டும் என்று செய்தி தெரிவிக்கப்பட்டது. இதுதவிர இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்படும் சுமார் 1,100 மாணவர்களுக்கும் 19-8-2013 அன்று வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட 857 மாணவர்களும் கவுன்சிலிங் முடிந்த மறுநாளே பழைய கல்லூரிக்குச் சென்று வகுப்புகளைத் தொடர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தனைக்கும் 5-8-2013 அன்று கவுன்சிலிங் முடிந்து ஆணைகள் வழங்கப்படுவதற்கு இரவு 9 மணிக்கு மேலாகிவிட்டது. மறுநாளே அவர்கள் சென்னையிலிருந்து தங்களின் பழைய கல்லூரிகளான திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர் போன்ற தொலைதூர நகரங்களுக்குச் செல்ல வேண்டும்.

மறுகலந்தாய்வில் கலந்துகொண்ட 857 மாணவர்களும் 19-8-2013 அன்று புதிய கல்லூரியில் சேரும்வரை பழைய கல்லூரிக்கு, வருகைப் பதிவேட்டிற்காகச் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட அறிவிப்பு. மேலும் 19-8-2013 வரை விடுமுறை நாள்களைத் தவிர்த்து, கல்லூரி வேலை நாள்கள், ஏழு நாள்கள் மட்டுமே. இந்த ஏழு வேலை நாள்களுக்காக 857 மாணவர்களும் மற்றும் அவர் தம் பெற்றோர்களும் பழைய தொலைதூரக் கல்லூரிகளுக்குச் சென்று, ஏழு நாள்கள் மட்டும் அவர்களை விடுதியில் தங்க வைத்து, அவர்கள் தங்குவதற்குத் தேவையான அவசியப் பொருள்களான பாய், தலையணை, போர்வை, வாளி, தட்டு மற்றும் இதர அவசியத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும். மேலும், ஏழு நாள்களுக்காக விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், விடுதி - வைப்புத் தொகை முதலிய கட்டணங்களையும் செலுத்த வேண்டும். அவர்கள் ஏழு நாள்கள் முடித்த பின்பு, மாற்றுச் சான்றிதழ் பெற்ற பிறகு, மீண்டும் புதிய கல்லூரிக்குச் சென்று, இதைப்போலவே தங்குவதற்கு உண்டான வேலைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவப் படிப்பைப் பொருத்தவரை, தகுதி அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால் சென்னை மாணவர் திருநெல்வேலிக்கும், தூத்துக்குடி மாணவர் திருவாரூருக்கும், கன்னியாகுமரி மாணவர் வேலூருக்கும் இப்படி பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து, மருத்துவக் கல்வி பயில்கின்றனர். இவர்களை ஏழு நாள்கள் வருகைப் பதிவேடு - வகுப்பிற்காக, விடுதியில் தங்க வைத்து, அலைய விடுவது அவர்களுக்குத் தரப்படும் தண்டனையே ஆகும்.

இத்தனைக்கும் 19-ஆம் தேதி முதலே, மறுகலந்தாய்வில் கலந்துகொண்டு புதிய கல்லூரிகளைத் தேர்வு செய்த மாணவர்களுக்கும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு, புதிதாகச் சேர்ந்த சுமார் 1,100 மாணவர்களுக்கும் புது வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த 1,100 மாணவர்களும் புதியவர்கள் என்பதால் வகுப்புகள் ஆரம்பம் முதலே தொடங்கப்பட வேண்டும். இந்த நிலையில், மறு கலந்தாய்வில் கலந்துகொண்ட 857 மாணவர்களையும் குறிப்பிட்ட ஒரு நாளில் பழைய கல்லூரிக்கு வரவழைத்து, அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்படி செய்திருந்தால், மாணவர்களும், அவர்தம் பெற்றோர்களும் அலைச்சலின்றி, மன உளைச்சல் இன்றி, புதிய கல்லூரிக்கு புன்னகையோடு சென்றிடுவர்.

கலந்தாய்வு நடத்துவதும், மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் இடம் தருவதும் மட்டுமல்ல நிர்வாகத்தின் பணி. அதற்கு மேலும் சிந்தித்து, இதுபோன்ற இடர்பாடுகள் ஏற்படாவண்ணம், மாணவர்களை வழிநடத்துவதும் கல்லூரி நிர்வாகத்தினரது பணியே.

முதலாமாண்டு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கும் இந்த இரு வாரங்களுக்கும் விடுப்பு அறிவித்து, எல்லா மாணவர்களுக்கும் ஒரே நாளில் அதாவது 19-8-2013 அன்று வகுப்புகள் தொடங்குவதாக அறிவித்து இருந்தால், அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று இருப்பர்.

அதைவிடுத்து, மிகச் சில நாள்களுக்காக, மாணவர்களை விடுதியில் தங்க வைத்து வேடிக்கை பார்ப்பது, ""சாதனை புரிந்த மாணவர்களுக்கு, வேதனையைப் பரிசாகத் தருவதற்கு ஒப்பாக உள்ளது'' என்பதே நிதர்சன உண்மையாகும்.

கவிதா சிவகுமார், ஒரத்தநாடு.