சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கைகூடுமா கதவணைத் திட்டம்?

கரூரை அடுத்துள்ள அழகிய ஊர் மாயனூர். காவிரி பரந்து விரிந்து பாயும் மாயனூரில் தடுப்பணை உள்ளது.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 8:39 am

கரூரை அடுத்துள்ள அழகிய ஊர் மாயனூர். காவிரி பரந்து விரிந்து பாயும் மாயனூரில் தடுப்பணை உள்ளது. அதையடுத்து கதவணை சுமார் இரண்டரை கிலோமீட்டர் ஷெட்டர் பாலம் எனப்படும் மேம்பாலம். கட்டளைக் கால்வாய், மாயனூர்க் கால்வாய், கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் என விரிவுபடுத்தி உபரி மழை நீரைச் சேமித்து புதுக்கோட்டை வரையிலான ஆறு மாவட்டங்கள் வறட்சிக் காலத்தில் மழை பொழியாத சூழலில் இங்கிருந்து நீரைப் பெற்று லட்சக்கணக்கான விவசாயிகளும் பாசன வயல்களும் பயனடையும் விதத்தில் துவக்கி வைக்கப்பட்ட திட்டம் கொள்ளிடம் உபரி நீர் திட்டம் எனும் இத்திட்டமாகும். 189 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, வீணாகும் 5.4 டி.எம்.சி. நீரைப் பயன்பாடுடையதாக ஆக்க உருவாக்கப்பட்ட திட்டம்.

இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படும்போது தென்னக நதிகள் இணைப்புத் திட்டம் கைகூடும் விதமாக இது அமையும். மறைந்த மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி தென்னக நதிகள் இணைப்பை வலியுறுத்தி காவிரிக் கரையோர பயணங்களை எல்லாம் மேற்கொண்டார்.

1950-களிலேயே மாயனூர் கால்வாய்கள் விரிவாக்கம் துவங்கியுள்ளது. அக்னி ஆறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, குண்டலாறு என பல ஆறுகள் இத்திட்டம் மூலம் இணைப்புப் பெறுகிறது. ஸ்ரீரங்கம் - புதுக்கோட்டைவரை சென்று பயன் தரும் தொலைநோக்குத் திட்டமாகும்.

"நீர் இன்றி அமையாது உலகு' என்பதற்கு ஏற்ப பண்டைய நகர, கிராம அமைப்புகளை பார்ப்போமேயானால் ஒவ்வொரு கிராமத்திலும் வீட்டுக்கு வீடு கிணறுகள், ஊருக்கு ஊர் இரண்டொரு குளங்கள், கண்மாய்கள் இருக்கும். ஊரின் பல பகுதியில் இருந்தும் மழைநீர், வெள்ளப் பெருக்கு நீர்கள் அந்தந்த கண்மாய், குளத்தைச் சென்றடையும் அமைப்பு முறை நேர்த்தியாய் இருக்கும் அவை ஆதாரமாகப் பயன் தரும்.

இத்தகையதொரு தொலைநோக்குத் திட்டமுடன் உருப்பெற்ற மாயனூர் கதவணைத் திட்டம் 2006-இல் 189 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டு தற்பொழுது வரை 30 சதவிகிதம் பணிகளே நிறைவுற்றுள்ளன. கதவணை திறக்கப்படும்போது தண்ணீர் செல்வதற்கான கால்வாய் சீரமைப்புப் பணிகள் எதுவும் நடக்கவில்லை.

பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் பணி நடைபெறுவதால் காட்டுப்புத்தூர், முசிறி என சுற்றுவட்டத்தில் உள்ள பல ஊர் மக்கள் பயணத்தில் கடும் சிரமம் ஏற்பட்டு தடுமாறுகிறார்கள். அண்மையில் ஒரு சிறு மணல்பாதை தாற்காலிகமாக போடப்பட்டு அதில் பயணிக்கிறார்கள். மழை பெய்து நீர் பெருக்கு உண்டாகுமானால் பயணிக்க முடியாது. எனவே இவ் வேலைகளைத் துரிதப்படுத்தி விரைந்து முடித்தால் மட்டுமே தென்னக நதிகளை இணைக்கும் நெடுநாளைய திட்டத்தின் துவக்கம் அமையும்.

இதற்கிடையே இத்திட்டம் கைவிடப்பட்டு "காவிரி குண்டாறு திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்த மத்திய அரசின் உதவிக்காக பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

வரும் ஆகஸ்டில் இப்பணி நிறைவுற்று விடும் என்று பணி மேற்கொண்டிருக்கும் துறை சார்பில் சொல்லப்படுகிறது.

திட்டமிட்டபடி புதுக்கோட்டை வரை பாசன வசதி பெறும் கொள்ளிடம் உபரி நீர் திட்டமாக இத்திட்டம் மலருமா? அல்லது முடக்கப்படுமா என்பது விவசாயிகளின் கேள்வியாக அமைகிறது.

எத்தனையோ திட்டங்களை புதிது புதிதாக அறிவிக்கும் தமிழ்நாடு அரசு நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை மேம்படுத்தும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு பணிக்கு செலவிடப்பட்டிருப்பதாலும்கூட, உடன் மறுநிதி ஒதுக்கி இத்திட்டத்தை மலரச் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

திட்டம் தகுதி படைத்ததாக இருந்தால் அதைத் துவக்கியது யார் எனப் பார்க்காமல் பணியை நிறைவு செய்வதுதான் நல்ல செயலாகும்.

இதேபோல குளித்தளை அருகில் அய்யர்மலை ரோப்கார் திட்டம் பொதுமக்கள் பங்களிப்பாக சுமார் இரண்டரை கோடி ரூபாய் நடப்புக் கணக்கு இருப்பாக வங்கியில் செயல்பாடற்று இருக்கிறது.

அண்மையில் பென்னிகுயிக் விழாவெடுத்து, மணிமண்டபம் கட்டி, சிலை வைத்து விழாவெடுத்தோம். காரணம் அவர் கட்டிய அணைத்திட்டம். அதற்கு நிதி தேவைப்பட்டபோது அவர் தன் நாடு சென்று சொத்துகளை விற்று அந்தப் பணத்தில் செலவிட்டு திட்டத்தை நிறைவேற்றினார்.

கரூர் கடவூர் பக்கத்தில் சேவாப்பூர் காந்தி எனப் போற்றப்படும் லியோ பிரவோ. அவர் செய்த அற்புதமான பணி 200 ஏக்கர் தரிசு நிலத்தை விளைநிலமாக்கி குளங்களை வெட்டி விவசாய மேம்பாடு கண்டது.

கர்ம வீரர் காமராசர் ஒருமுறை பயணம் மேற்கொண்டபோது விவசாயிகள் சூழ்ந்துகொண்டு முறையிட்டார்களாம். ""நாங்கள் சிறப்பாக விவசாயம் செய்யத் தயாராக உள்ளோம். ஆனால், நீர் பாய்ச்ச வழியில்லை. எங்கள் விளைநிலங்கள் எல்லாம் மேட்டுப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளது. அருகிலேயே ஆறு உள்ளது. ஆற்று நீரை எங்கள் நிலங்களுக்கு பாய வழிவகுத்துத் தர வேண்டும்'' என முறையிட்டார்களாம். உடனே பொறியாளர்களை அழைத்த காமராசர் விவசாயிகளின் கோரிக்கையைச் சொல்லி ஆவன செய்து கொடுங்கள் என்றாராம். பொறியாளர்களோ "அது மேடு, இது பள்ளம் வாய்ப்பே இல்லை' என்று கைவிரித்தார்களாம். காமராசரோ "இதைச் சொல்லத்தான் படித்துப் பட்டம் பெற்றீர்களா? அதுதான் தடை என்பது அவர்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். தடையை நீக்கி வழியென்ன என்பதுதானே படிப்பு' எனச் சொல்லிவிட்டு.

""ஒரு தடுப்பைக் கட்டினால் நீர் தாவி மேல் வரும்போது அதைக் கால்வாய் மூலம் மேட்டு நிலங்களின் விளைச்சலுக்கு அனுப்ப முடியும் அல்லவா'' எனக் கேட்கவே பொறியாளர்கள் தலை தாழ்த்தினார்களாம். திட்டம் கைகூடியதாம்.

நீராதாரத்தை மேம்படுத்தி, வீணாகக் கடலில் கலக்கும் மழைநீரைத் தேக்கி பயனளிக்கும் வகையில் தீட்டப்பட்டுள்ள இத்திட்டம் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் திட்டம்.

நதிகள் இணைப்புக்கு முன்னோடித் திட்டம் என்பதை முன்னிறுத்தி கிளைக் கால்வாய்கள், நீர் திறக்கும்போது எல்லைவரை செல்லும் வழித்தடம் சீரமைக்கும் பணி ஆகியவற்றையும் உடனடிச் செயல்பாடாக்கி மலரச் செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும் என்பதே லட்சக்கணக்கான பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலை. பழநியப்பன், கரூர்.