சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள களங்கம்

இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட விவகாரமும், அது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கருத்தும் மத்திய அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 6:55 am

இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட விவகாரமும், அது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கருத்தும் மத்திய அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா விஷயத்தில் காங்கிரஸ் கையாண்ட முறையும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் ஏற்படுத்திய ரகளையும் இந்த மழைக்காலக் கூட்டத்தொடரையே வீணாக்கிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது வலைப்பூவில் எழுதியுள்ளது:

எல்லைக் கோட்டில் ராணுவ வீரர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அந்தோனி வெளியிட்ட அறிக்கை கண்டிக்கத்தக்கது. இது குறித்து முதல் நாள் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்தது வேறு அறிக்கையை வெளியிட்டார். 2-வதாக வெளியிட்ட அறிக்கைதான் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருந்தது.

தெலங்கானா: தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களே எதிர்ப்புத் தெரிவித்து வருவது அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. இதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவே உள்ளது.

தெலங்கானா அறிவுப்புக்குபின், நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் முதல் வாரம் முடங்கியது. எதிர்வரும் தேர்தலை மையப்படுத்தியே, தனி மாநில அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் நினைக்கிறது.

எனது 41 ஆண்டு கால நாடாளுமன்ற அனுபவத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இப்போதைய நாடாளுமன்ற நடவடிக்கையைப் போல் எந்த அரசையும் பார்த்தது கிடையாது.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களின் கூச்சலை அக்கட்சியாலே கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்னும் 2 வாரங்கள் நாடாளுமன்றத்தை மத்திய அரசு எப்படி நடத்தப் போகிறது என்பதை உணர முடியவில்லை.

பாஜக எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளில் விழிப்போடு இருக்க வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக பிரதமர் அலுவலகம் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு தெரிவித்துள்ளது. அதில், மும்பை தாக்குதல் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதன்மூலம் இத்தாக்குதலுக்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தாது என்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.