சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜம்முவில் தொடரும் பதற்றம்: மேலும் சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் நிகழ்ந்த வகுப்பு மோதலைத் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 5:45 am

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் நிகழ்ந்த வகுப்பு மோதலைத் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்முவில் உள்ள உதம்பூர், சம்பா, கதுவா உள்ளிட்ட மாவட்டங்களிலும், தோடா மாவட்டத்தின் பத்ரவா நகரிலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜம்மு மற்றும் ரஜெüரியில் சனிக்கிழமை இரவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், பிரச்னைக்குள்ளான கிஷ்த்வார் மாவட்டத்தில் 3-வது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை கிஷ்த்வார் மாவட்டத்தில் ரம்ஜான் தொழுகைக்குப் பின், ஒரு பிரிவைச் சேர்ந்தோர் தேசத்துக்கு எதிராக கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மோதல் வெடித்தது.

இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.

இந்த சூழ்நிலையில், மேலும் ஒருவரின் உடல் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கலவரத்தில்தான் அவர் உயிரிழந்தாரா என்று தெரியவில்லை.

வகுப்பு மோதலைக் கண்டித்து ஜம்முவில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சனிக்கிழமை விடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் 48 மணி நேரமாக உயர்த்தப்பட்டது.

ஜேட்லிக்கு அனுமதி மறுப்பு: கிஷ்த்வார் மாவட்டத்துக்கு செல்வதற்காக பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்றார். ஆனால், அவர் ஜம்மு விமான நிலையத்தில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

கதுவா மாவட்டத்துக்கு செல்ல முயன்ற மாநிலங்களவை எம்.பி.யான அவினாஷ் ராய் கன்னாவும் தடுக்கப்பட்டார்.

ஜேட்லி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பாஜக தலைவர் ஜூகல் கிஷோர் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முஃப்திக்கும் அனுமதி இல்லை: மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான மெஹ்பூபா முஃப்திக்கும், கிஷ்த்வார் செல்ல போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டு முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

"எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு பணியாற்ற வேண்டிய கடமை எனக்கு உண்டு. பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதன் நோக்கம், கடும் கோபத்தில் உள்ள அவர்களை அமைதிப்படுத்துவதுதான்' என்று மெஹ்பூபா முஃப்தி கூறியுள்ளார்.

ஜம்மு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தைக் கருதியும், புரளிகள் பரப்பப்பட்டு வருவதாலும் இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

கிஷ்த்வார் வகுப்பு மோதலைக் கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஹூரியத் மாநாட்டுக் கட்சியினர் சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அது, 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.