சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சில்லறை விற்பனை: அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகள் தளர்வு

வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளை வெகுவாக தளர்த்தியுள்ளது மத்திய அரசு. மேலும் பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை அதிகரித்துள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 8:22 am

வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளை வெகுவாக தளர்த்தியுள்ளது மத்திய அரசு. மேலும் பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை அதிகரித்துள்ளது.

தொலைத்தொடர்புத்துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. முன்னர் இந்த வரம்பு 74 சதவீதமாக இருந்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:

சில்லறை வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளூரில் 30 சதவீத உற்பத்திப் பொருள்களை கட்டாயம் கொள்முதல் செய்யவேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது.

பல இலச்சினை (மல்டி பிராண்டு) சில்லறை விற்பனை நிலையங்களை 10 லட்சத்துக்கு குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்களில் அமைக்க மாநிலங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

சில்லறை வணிகத்தில் முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டாளர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதேநேரத்தில் காப்பீட்டுத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. இந்த துறையில் 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை அதிகரிக்க கடந்த மாதம் அமைச்சகங்கள் இடையிலான குழு பரிந்துரைத்திருந்தது.

அமைச்சரவையின் முடிவின்படி வால்மார்ட், டெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை தொடங்கும்போது மட்டும் உள்ளூரைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து உற்பத்தி பொருள்களை கொள்முதல் செய்தால் போதும்.

பாதுகாப்புத் துறைக்கான அன்னிய நேரடி முதலீட்டு வரம்பில் மாற்றம் இல்லை, 26 சதவீதமாகவே தொடரும்.

ஒரே இலச்சினை பொருள் சில்லறை விற்பனை நிலையங்களில் 49 சதவீதம் வரையிலான அன்னிய முதலீடு அரசின் முன் ஒப்புதல் இல்லாமல் வர அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேல் வரும் முதலீடுகள் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதி பெற்று வரவேண்டும்.

கூரியர் சேவை துறையிலும் 100 சதவீத அன்னிய முதலீடுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.