ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ வசம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டு, இந்தியாவில் உள்ளவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சிபிஐயின் விசாரணை மந்தமாகச் செல்வதாக கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் வழக்கின் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிஐக்கு உத்தரவிட்டனர்.
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மலேசியா பதில் அளிக்கவில்லை: அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், "இந்த வழக்கு தொடர்பாக மலேசிய அரசிடம் விவரம் கேட்டு மத்திய அரசு அனுப்பிய கடிதங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. இதுவரை சேகரித்த ஆதாரங்கள் தொடர்பாக, மத்திய தடயவியல் நிபுணர் அளித்த அறிக்கை, நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்க மேலும் 4 வார அவகாசம் தேவை' என்றார்.
மந்தமாக செல்கிறது: இதற்கு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, "இந்த வழக்கு விசாரணையின் போக்கு தொடக்கம் முதலே மந்தமாகச் செல்கிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் விசாரணை முடியவில்லை. தற்போதைய நிலையில், ஏர்செல் - மேக்சிஸ் பங்குகள் விற்கப்பட்டது தொடர்பான பிரதான வழக்கில் மலேசியாவில் உள்ளவர்களை சேர்க்காமல் முதலில் இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறினார்.
தாமதம்: இதையடுத்து, வழக்கில் பொது நல மனு தாக்கல் செய்திருந்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் கூறியது:
"2004-2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, இந்தியாவின் ஏர்செல் நிறுவனப் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் (2011, அக்டோபர் 9) முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. அதில், சன் டைரக்ட் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 700 கோடியும், ஆல் ஆசியா நெட்வொர்குக்கு சுமார் ரூ. 900 கோடியும் பணப் பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து ஒராண்டுக்கு முன்பே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மலேசிய அரசு பதில் அளிக்கவில்லை என்று காரணம் கூறி வழக்கு விசாரணையை தாமதிக்க சிபிஐ முயல்கிறது' என்று பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டினார்.
உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்: இதைத் தொடர்ந்து மற்றொரு மனுதாரரும் ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியது:
"இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தில் 99.30 சதவீதம் பங்குகள் உள்ளன என்று மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் அந்நாட்டுப் பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் 74 சதவீதத்துக்கு மேல் அன்னிய நேரடி முதலீடு இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில், மேக்சிஸ் நிறுவனம் இந்திய நிறுவனத்தில் 99.30 சதவீதத்தை எவ்வாறு முதலீடு செய்ய முடியும்? அதற்கு யார் அனுமதி வழங்கியது? ஏர்செல் பங்குகளை விற்பதற்கு 2006, மார்ச் 6-ஆம் தேதி மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரிய (எஃப்ஐபிபி) கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. அக்கூட்டம் தொடர்பான கோப்புகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஏர்செல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். எஃப்ஐபிபி விவகாரம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும்' என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த சிபிஐ வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், "இந்த வழக்கு தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து இறுதி முடிவு எடுக்க மேலும் இரண்டு மாதங்களாவது அவகாசம் தேவை' என்றார்.
இதற்குப் பிரசாந்த் பூஷண், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள்: இதையடுத்து சிபிஐக்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
"மலேசிய அரசாங்கத்துக்கு இந்தியா அனுப்பியுள்ள கடிதங்களைக் காரணமாகக் கூறி இந்த வழக்கை மேலும் காலதாமதம் செய்யக் கூடாது. சிபிஐயிடம் தற்போதுள்ள ஆதாரங்களை வைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணையையும் முடித்து, அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். 2006, மார்ச் 6-இல் நடைபெற்ற எஃப்ஐபிபி கூட்டத்தின் கோப்புகளை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டு அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 7 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
"கனிமொழி மனு பின்னர் பரிசீலனை'
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தாக்கல் செய்த மனு பின்னர் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
கனிமொழியின் மனுவை வியாழக்கிழமை பரிசீலித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "2ஜி வழக்குகளை வேறு நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ரிலையன்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நான்கு நாள்களில் பதிலளிக்க சிபிஐக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த மனு மீதான விசாரணை முடிந்த பிறகு கனிமொழியின் மனு பரிசீலிக்கப்படும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

