முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளம்-தமிழகம் இடையேயான வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு நடத்திய "அதிகாரமளிக்கப்பட்ட குழு' அளித்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தட்டூ, சந்திரமௌலி குமார் பிரசாத், மதன் பி. லோகூர், எம்.ஒய். இக்பால் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று 2006 பிப்ரவரி 27-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைச் செயல்படுத்தாமல் இருக்க "அணை பாதுகாப்புச் சட்டத்தை' கேரள அரசு இயற்றியது.
"அச்சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லாது' என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
அதை விசாரித்த நீதிமன்றம், 2009 டிசம்பர் மாதம் வழக்கு விசாரணையை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை உள்ள மலைப் பகுதியில் இருந்து 300 மீட்டர் அடிவாரத்தில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
புதிய அணைக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் திட்ட அறிக்கையை கேரள அரசு தாக்கல் செய்தது.
அதைத் தொடர்ந்து, அரசியல் சாசன அமர்விடம் புதிய அணை கட்டும் கோரிக்கையை கேரளம் முன்வைத்து வருகிறது.
அதன் மீதான வாதத்தில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில் சில ஐஐடி முன்னாள் பேராசிரியர்கள் குழுவின் அறிக்கையை கேரளம் தாக்கல் செய்தது.
அதேசமயம், அணை வலுவுடன் இருப்பதாக தமிழக அரசு ஆதாரங்களை தாக்கல் செய்தது.
அதையடுத்து அணையின் ஸ்திரத்தன்மை, புதிய அணை கட்டும் கேரளத்தின் கோரிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அதிகாரமளித்தல் குழுவை 2010 பிப்ரவரி 18-ஆம் தேதி அரசியல் சாசன அமர்வு நியமித்தது.
அதில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரள அரசின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் உள்பட 5 பேர் நியமிக்கப்பட்டனர்.
அக்குழுவினர் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஆய்வு நடத்தி சுமார் 50,000 பக்கங்கள் கொண்ட ஆய்வு ஆவணங்களை, கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில், முல்லைப் பெரியாறு அணை ஸ்திரத்தன்மையுடன் உள்ளதால் அணையின் நீர் அளவை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று ஆனந்த் குழு தெரிவித்தது.
அதை, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் இறுதி விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, ஆனந்த் குழு அறிக்கை குறித்து இரு மாநில அரசுகளும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, "நீதிபதி ஆனந்த் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அணையின்
நீர்மட்டத்தை உயர்த்த உத்தரவிட வேண்டும்' என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கேரளம் தாக்கல் செய்துள்ள மனுவில், "மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு மாநில அரசு இயற்றும் சட்டம் குறித்து அண்டை மாநிலம் கேள்வி எழுப்ப அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. புதிய அணை கட்டுவதே பிரச்னைக்குத் தீர்வு' என்று கூறியுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

