சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரயில்வே பதவிக்கு லஞ்சம் பெற்ற வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்

ரயில்வே பதவி உயர்வை பெற்றுத் தருவதற்கு முன்னாள் ரயில்வே அமைச்சரின் உறவினர் லஞ்சம்

Updated On :2 ஜூலை 2013, 7:21 am

ரயில்வே பதவி உயர்வை பெற்றுத் தருவதற்கு முன்னாள் ரயில்வே அமைச்சரின் உறவினர் லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது தாமதமாகி வருகிறது.

புதன்கிழமைக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 நபர்களுக்கு ஜாமீன் கிடைப்பது எளிதாகி விடும்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறுகையில், ""ரயில்வே பதவிக்கு லஞ்சம் கைமாறிய வழக்கில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.

மேற்கு ரயில்வே பொது மேலாளராக இருந்த மகேஷ் குமாருக்கு ரயில்வே வாரிய உறுப்பினராக (பணியாளர்) பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், அவர் வாரியத்தின் வேறு துறையைப் (மின்சாரம்) பெறுவதற்காக முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லாவை அணுகினார்.

குமார் விரும்பும் துறையை ஒதுக்குவதற்கு ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டது. இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட சந்தீப் கோயல் என்பவரிடம் ரூ.90 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

ரயில்வே அதிகாரி மகேஷ் குமார், அமைச்சரின் உறவினர் விஜய் சிங்லா ஆகியோர் மே 3ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் மேலும் சிலர் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் முன்னாள் அமைச்சர் பவன் குமார் பன்சால் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதுகுறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ரயில்வே அமைச்சகத்திடம் சிபிஐ அனுமதி கோரி உள்ளது. ஆனால் இன்னமும் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை.

ஒரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் நபர் அல்லது நபர்கள் மீது 60 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஜாமீன் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே வாரியத் தலைவர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு: ரயில்வே வாரிய உறுப்பினர் (மெக்கானிக்கல்) அருணேந்திர குமார், வாரியத்தின் தலைவர் பொறுப்பை திங்கள்கிழமை கூடுதலாக ஏற்றுக் கொண்டார்.

இதேபோல வாரிய உறுப்பினர் (மின்சாரம்) போக்குவரத்து உறுப்பினர் பொறுப்பையும் திங்கள்கிழமை முதல் கூடுதலாக கவனிப்பார் என ரயில்வே துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ரயில்வே வாரிய உறுப்பினர் (பணியாளர்) மகேஷ் குமார் லஞ்ச விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இவர் வகித்து வந்த பொறுப்பை பொறியியல் துறை உறுப்பினர் சுபோத் ஜெயின் கவனிப்பார்.

ரயில்வே வாரிய பதவி உயர்வில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்ததையடுத்து, ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே புதிய தலைவர் மற்றும் காலியாக உள்ள உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படும் என ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.