உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை கவனிக்க மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அம்பிகா சோனி, உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா ஆகியோர் டேராடூனில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தனர். அப்போது விஜய் பகுகுணா கூறியதாவது:
உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை கவனிக்க மறுவாழ்வு மற்று மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சேதத்தைப் பரிசீலித்து மாநில அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. முதல்வரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறுவார்கள்.
வளர்ச்சிப் பணிகளைக் கவனிப்பது மட்டுமின்றி, அடுத்த 100 ஆண்டுகளுக்கு சவால்களைச் சந்திப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் இந்த ஆணையம் ஆராயும்.
நதிக்கரையோரங்களில் வீடுகள் மற்றும் வர்த்தக மையங்களைக் கட்டுவதற்கு முழுமையான தடையை அமல்படுத்துவது என்றும் மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வெள்ளச் சேதத்தின் கடுமையை மனதில் கொண்டு, சிறு கடைகள் வைத்திருப்போர், சாலையோர உணவகங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் என்று பயனாளிகளின் வரம்பை விரிவாக்கும் வகையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கான விதிமுறைகளை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போதைய சூழ்நிலையைக் கருதி, வெள்ளத்தால் சேதமடைந்த சிறு கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களுக்கு ரூ.50 ஆயிரமும், முற்றிலும் சேதமடைந்த ஹோட்டல்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்குவதென்று முடிவு செய்துள்ளோம். ரூ.2 லட்சம் முதல் 10 லட்சம் வரை சேதமடைந்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு 30 சதவீதம் வரை இழப்பீடு அளிக்கப்படும்.
ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சேதமடைந்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு 20 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கும் மேல் சேதமடைந்த வர்த்தக நிறுவனங்களுக்கு 10 சதவீதமும் இழப்பீடு அளிக்கப்படும்.
தவிர, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை இன்னும் ஓராண்டுக்கு திருப்பிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தலா 15 கிலோ அரிசி மற்றும் மாவு, 5 கிலோ பருப்பு வகைகள், 3 கிலோ சர்க்கரை, தலா ஒரு லிட்டர் கடுகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், 10 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை இன்னும் ஒரு மாதத்துக்கு வழங்கப்படும் என்றார் விஜய் பகுகுணா.
500 கி.மீ. தூர சாலைகள்: மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ""வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை கவனிக்க மறுவாழ்வு மற்று மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்படுவது ஆக்கபூர்வமான, முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். இது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து மற்ற அமைப்புகளிடம் இருந்தும் மாநில அரசு பெற உள்ள பெருமளவிலான நிதி பயன்படுத்தப்படுவதில் வெளிப்படைத்தன்மையை இந்த ஆணையம் உறுதிப்படுத்தும்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பிரதமர் அறிவித்துள்ள ரூ.1,000 கோடியைத் தவிர, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து ரூ.2,500 முதல் 3,000 கோடி வரை நிதியுதவி எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைக் கருத்தில் கொண்டு, இங்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை என்பது 150 நாள்களாக அதிகரிக்கப்படும்.
இதற்காக, இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலத்தில் சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் மிக அதிகம் என்பதால் சுமார் 500 கி.மீ. தூரத்துக்கு சாலைகளை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும்'' என்றார்.
680 பேர் தவிப்பு: இதனிடையே, சமோலி மாவட்டத்தில் அதிகாரிகள் கூறுகையில், ""பத்ரிநாத்தில் 220 யாத்ரிகர்கள் திங்கள்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்னும் 680 பேர் சிக்கியுள்ளனர்'' என்று தெரிவித்தனர்.
டேராடூன் உள்ளிட்ட பகுதிகளில் மோசமான வானிலை நிலவியபோதிலும், பத்ரிநாத் பகுதியில் இருந்து யாத்ரிகர்கள் மற்றும் உள்ளூர் மக்களை மீட்டு ஜோஷிமடம் பகுதிக்கு அழைத்துச் செல்ல சமோலி மாவட்டத்தில் ஹெலிகாப்டர்கள் திங்கள்கிழமை இயங்கத் தொடங்கின.
உத்தரகண்ட் பேரழிவுக்குப் பிறகு சுமார் 3,000 பேர் காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கௌரிகுண்ட் பகுதியில் மீட்புப்படை ஹெலிகாப்டர் கடந்த வாரம் நொறுங்கி விழுந்ததில் உயிரிழந்த இந்திய-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரின் உடல்கள் இன்னும் கண்டெடுக்கப்படவில்லை. அவற்றைத் தேடும் பணியில் துணை ராணுவப் படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

