நரேந்திர மோடிக்கு பா.ஜ.க.வில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து கட்சியில் தான் வகித்து வந்த பதவிகளை ராஜிநாமா செய்ததை மூத்த தலைவர் எல்.கே.அத்வானி செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு இந்த சமரசத்துக்கு வழிசெய்துள்ளது.
கோவாவில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பாஜகவின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இந்தச் செயற்குழுக் கூட்டத்தை மூத்த தலைவர் அத்வானியும் அவரது ஆதரவாளர்களான ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, உமா பாரதி உள்ளிட்டோர் புறக்கணித்தனர். இதன் மூலம் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பது பகிரங்கமானது.
அடுத்ததாக, கட்சியின் போக்கு கவலையளிப்பதாகக் கூறி அத்வானி தனது கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். இது பாஜக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவசரமாகக் கூடிய பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு, அத்வானியின் ராஜிநாமாவை நிராகரிப்பதாக அறிவித்தது. எனினும், தனது முடிவில் அத்வானி உறுதியாக இருந்தார்.
சமாதான முயற்சி: இந்நிலையில், ராஜிநாமா முடிவைத் திரும்பப் பெறுமாறு அத்வானியை வலியுறுத்துவதற்காக தில்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, கோபிநாத் முண்டே, ரவிசங்கர் பிரசாத், கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சென்றனர். அவரது வழிகாட்டுதல் கட்சிக்கு அவசியம் என்பதை அவர்கள் அத்வானியிடம் எடுத்துக் கூறினர்.
இந்த சமாதான முயற்சிகளுக்கு இடையில், ஜஸ்வந்த் சிங்கின் ஆதரவு, அத்வானிக்குக் கிடைத்துள்ளது. அத்வானியைச் சந்தித்து விட்டு வந்த அவரிடம் இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ""அத்வானி எழுப்பிய கேள்விகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். இது கட்சியின் நலன் சார்ந்தது மட்டுமின்றி நாட்டின் நலனும் சார்ந்ததாகும்'' என்று ஜஸ்வந்த் சிங் பதிலளித்தார்.
அத்வானியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசேன், ""பா.ஜ.க.வின் மிகப்பெரிய தலைவர் அத்வானி. அவர்தான் கட்சியை நிர்மாணித்தார். மக்கள் அவரை விரும்புகின்றனர். அவர் தனது ஆசியையும் வழிகாட்டுதலையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இப்போதைய பிரச்னையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தீர்வு வெளிவரலாம்'' என்றார்.
ராஜிநாமா வாபஸ்: இதைத் தொடர்ந்து, அத்வானியை பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். அதன் பின் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி ஆகியோர் அத்வானியின் இல்லத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஏற்கெனவே தயாராக வைத்திருந்த சிறிய அறிக்கையை ராஜ்நாத் சிங் வாசித்தார். "ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை மாலை அத்வானியுடன் பேசினார். அவர், ராஜிநாமா நிராகரிப்பு என்ற பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழுவின் முடிவை மதிக்குமாறும், தேசிய நலன் கருதி கட்சியைத் தொடர்ந்து வழிநடத்துமாறும் அத்வானியைக் கேட்டுக் கொண்டார். பாகவத்தின் அறிவுரையை ஏற்பது என்று அத்வானி முடிவு செய்துள்ளார்' என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அத்வானி ஏன் கலந்து கொள்ளவில்லை? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ""இது என்னுடைய செய்தியாளர் சந்திப்பு என்றும் இதில் நான் பேசுவதை நீங்கள் அமர்ந்து கேட்பது நன்றாக இருக்காது என்றும் நான்தான் அத்வானியிடம் கூறினேன். அதனால்தான் இதில் அவர் பங்கேற்கவில்லை. கட்சி செயல்படும் விதம் குறித்து அவர் எழுப்பிய அனைத்துக் கவலைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று அவருக்கு நான் உறுதியளித்துள்ளேன். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகள் குறித்து தலைவர், அத்வானியுடன் விவாதம் நடத்துவார்'' என்று ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.
மோடி நியமனத்தில் மாற்றமில்லை:
முன்னதாக, கட்சிப் பொறுப்புகளில் இருந்து அத்வானி ராஜிநாமா செய்துள்ள சூழ்நிலையில், மோடி நியமனத்தில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது இம்முடிவில் மாற்றம் உண்டா? என்று ராஜ்நாத் சிங்கிடம் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் செய்தியாளர்கள் செய்வாய்க்கிழமை மதியம் கேள்வி எழுப்பினர். அதற்கு, ""இந்த முடிவை மாற்றப் போவதாக யார் கூறியது? எனது முடிவை நான் எங்கே மாற்றுவது? அதற்கான வாய்ப்பில்லை. அத்வானியைப் பொறுத்தவரை, அவர் எங்கள் வழிகாட்டியாக இருந்துள்ளார். இருக்கிறார். தொடர்ந்து இருப்பார்'' என்று ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.
நரேந்திர மோடி வரவேற்பு: கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜிநாமா செய்ததை அத்வானி வாபஸ் பெற்றதை முழு மனதுடன் வரவேற்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் மோடி, டுவிட்டர் இணைய தளத்தில் வெளியிட்ட பதிவில், "லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களை அத்வானி அதிருப்தியடையச் செய்ய மாட்டார் என்று எனக்குத் தெரியும் என்று நான் நேற்றே கூறியிருந்தேன். இப்போது அவரது ராஜிநாமா வாபஸ் முடிவை முழு மனதுடன் வரவேற்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன தீர்வு? இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு சுமுக தீர்வு காண வழி செய்துள்ளது. ராஜிநாமா முடிவைக் கைவிட வைக்க அத்வானிக்கு சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவியில் மோடி நீடித்தாலும், பிரதமர் வேட்பாளர் யார் என்பதைத் தங்களைக் கலந்து ஆலோசித்தே முடிவு செய்வோம் என்று அத்வானிக்கு உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் கூட்டணிக் கட்சிகளும் அவரை ஆதரிப்பது சுட்டிக் காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்தே அவர் ராஜிநாமா முடிவை வாபஸ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

