சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பின்தங்கிய மாநிலங்கள்: தகுதியை மறு ஆய்வு செய்ய விரைவில் உயர்நிலைக் குழு

பின்தங்கிய மாநிலங்களாக அறிவிக்க பின்பற்ற வேண்டிய தகுதிகளை மறு ஆய்வு செய்ய விரைவில் உயர்நிலை துணைக் குழு அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Updated On :12 மே 2013, 10:41 am

பின்தங்கிய மாநிலங்களாக அறிவிக்க பின்பற்ற வேண்டிய தகுதிகளை மறு ஆய்வு செய்ய விரைவில் உயர்நிலை துணைக் குழு அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் சிதம்பரம் கூறியது: சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சில மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. பின்தங்கிய மாநிலங்களாக அறிவிப்பதற்கான தகுதிகளை மறு ஆய்வு செய்ய பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தலைமையில் உயர்நிலை துணைக் குழு விரைவில் அமைக்கப்படும். அமைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அக்குழுவுக்கு உத்தரவிடப்படும் என்றார் சிதம்பரம்.

பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், பின்தங்கிய மாநிலங்களுக்கான புதிய விதிமுறைகளின்படி, பிகார் மாநிலம் தகுதி பெற்றுவிடும் என்றார்.

பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களை அடையாளம் காண்பது தொடர்பானவிதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும் என தமது பட்ஜெட் உரையில் சிதம்பரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் வளர்ச்சி உள்பட பல்வேறு துறைகளில் தேசிய சராசரி வளர்ச்சியைவிட பிகார் பின்தங்கி உள்ளதாகவும், வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் கோரி வருகிறார்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பரில் பாட்னாவிலும், கடந்த மார்ச் மாதம் தில்லி ராம் லீலா மைதானத்திலும் பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் ஒத்த கருத்துடைய தேசிய கட்சிக்கு, 2014 மக்களவைத் தேர்தலுக்குப்பிறகு மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் நிதீஷ் கூறியுள்ளார்.

பிகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக திட்ட அமைச்சர் ராஜீவ் சுக்லா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிதிநிறுவன ஊழல் குறித்து உயர் நீதிமன்றம் முடிவு: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்து, மேற்கு வங்க மாநிலத்தின் சாரதா நிதி நிறுவன ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சிதம்பரம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ""நிதி நிறுவன ஊழல் குறித்து விசாரிக்கத் தயார் என கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இனி இதுகுறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார்.