சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆராய்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் முதலீடு அவசியம்

நாட்டின் புத்தாக்க ஆய்வுப் பணிகளுக்காக கூடுதல் முதலீடு செய்யப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

Updated On :12 மே 2013, 4:37 am

நாட்டின் புத்தாக்க ஆய்வுப் பணிகளுக்காக கூடுதல் முதலீடு செய்யப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

1998-ஆம் ஆண்டு மே 11 மற்றும் 13-ஆம் தேதி பொக்ரானில் அணுஆயுத சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில் தேசிய தொழில்நுட்ப தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

நம் நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து காப்புரிமை பெறுவதற்காக அரசுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. அமெரிக்காவிலும் சீனாவிலும் நம்மை விட 12 மடங்கு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் அனுப்பப்படுகின்றன.

ஆராய்ச்சித் துறைகளில் போதுமான அளவுக்கு நிதி இல்லாததும் இதற்கு ஒரு காரணம். எனவே கல்வி, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

நம்முடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதத்தை மட்டுமே நாம் ஆராய்ச்சிப் பணிகளுக்கு செலவிட்டு வருகிறோம். இது சீனா, பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளை விட மிகவும் குறைவு. எனவே இந்த முயற்சியில் அரசுடன் தனியார் நிறுவனங்களும் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும்.

தற்போது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக நான்கில் ஒரு பங்கு தொகைதான் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துவருகின்றன. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல ஆராய்ச்சிப் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்.

நம்முடைய சமூக-பொருளாதார பின்புலங்களைக் கருத்தில் கொண்டு புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்காக ரூ.5000 கோடியை ஒதுக்கியுள்ளதுடன், அவற்றுக்காக 20 சிறப்பு ஆராய்ச்சி மையங்களையும் அரசு உருவாக்கவுள்ளது.

நம்மிடம் திறமையுள்ள பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய புத்தாக்க அறிவையும் படைப்புத்திறனையும் ஊக்குவித்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்துதர வேண்டும்.

ஆராய்ச்சி மையங்கள் மூலமாகத்தான் படைப்புத்திறனை உருவாக்க வேண்டும் என்பது அவசியமல்ல. வீடு, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றிலிருந்தே அவற்றை உருவாக்கலாம் என்றார் பிரணாப் முகர்ஜி.