தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்படுவதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது.
1993-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர் பால்சிங் புல்லரின் கருணை மனுவை 2011-ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்திருந்தார். இதையடுத்து புல்லர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை 2011-ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இவர்கள் சார்பில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.
இவர்களின் மனுக்களையும் ஏற்கெனவே புல்லர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்களையும் ஒரே கோரிக்கை தொடர்புடைய வழக்காகக் கூறி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதனால், இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும்வரை கைதிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இதற்கிடையே, வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானப்பிரகாஷ், மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேர் உள்ளிட்டோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த பிப்ரவரி மாதம் நிராகரித்தார். இதையடுத்து இவர்களும் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என்று கோரி மறுஆய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்களின் கோரிக்கை புல்லர் விடுத்த கோரிக்கைக்கு ஒத்து இருப்பதால் அதன் தீர்ப்பு வெளியாகும்வரை வீரப்பன் கூட்டாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் ஆறு வாரங்கள் தடை விதித்தது.
இந்த நிலையில் தேவேந்தர் பால்சிங் புல்லரின் மறுஆய்வு மனுவை விசாரித்திருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, குரியன் ஜோசஃப் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்தத் தீர்ப்பு, ராஜீவ் காந்தி கொலையாளிகள், சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் ஆகியோரின் மறுஆய்வு கோரிக்கைக்கும் பொருந்தும் என்பதால் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி: 1993-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர் பால்சிங் புல்லருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது. இந்தத் தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு புல்லர் 2003-ஆம் ஆண்டில் கருணை மனு அனுப்பினர். ஆனால், அவரது மனுவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 2011-ஆம் ஆண்டில் நிராகரித்தார். இந்த நிலையில், "எனது கருணை மனு மீது முடிவு எடுக்க நீண்ட நாள்கள் ஆனதால் எனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது'' என்று உச்ச நீதிமன்றத்தில் புல்லர் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிங்வி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அனைத்து மாநிலங்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பட்டியல், நிலுவையில் உள்ள கருணை மனுக்களின் விவரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு ஆகியவற்றை நீதிமன்ற உத்தரவின்படி மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.
அதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் ""சிறையில் நீண்ட காலத்தைக் கழித்து விட்டதால் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை அளிக்க கூடாது'' என்று உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கையும் புல்லர் வழக்கோடு நீதிபதி ஜி.எஸ். சிங்வி அமர்வு சேர்த்து விசாரித்தது. ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக மூத்த வழக்குரைஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கின் வாதம் கடந்த மாதம் 19-ஆம் தேதி முடிவுற்று, புல்லர் வழக்குடன் சேர்த்து தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளான சைமன், ஞானப்பிரகாஷ், மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேரின் கருணை மனுக்களைக் கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதையடுத்து அவர்களும் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், ""புல்லர் வழக்கில் நீதிபதி ஜி.எஸ். சிங்கி தலைமையிலான அமர்வு விரிவாக விசாரணை நடத்தியுள்ளது. அந்த அமர்வு அளிக்கும் தீர்ப்புக்கு பிறகு இவர்களின் மனுக்கள் மீது முடிவு செய்யப்படும்'' என்று கூறினார். பின்னர் நான்கு பேருக்கு உறுதி செய்யப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆறு வாரங்களுக்குத் தடை விதித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

