சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிரதமர் வேட்பாளர் யார்? - பாஜகவுக்கு ஐக்கிய ஜனதா தளம் நெருக்குதல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் நெருக்குதல் அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Updated On :12 ஏப்ரல் 2013, 11:08 am

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் நெருக்குதல் அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், ""சனிக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெறவுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்த ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், அதை கூட்டணி கட்சிகள் சில விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ஐக்கிய ஜனதா தளம், மோடியை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மதச்சார்பற்றவரைத்தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சி நெருக்குதல் அளித்து வருகிறது. இந்த விஷயத்தில் இப்போதே பாஜகவிடமிருந்து உத்தரவாதத்தைப் பெறும் வகையில், பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார், பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிப்பதற்கு தொடக்கம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். மோடியை வேட்பாளராக அறிவித்தால், பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

"தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மதச்சார்பற்றவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்துவீர்களா' என்று அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான சரத் யாதவிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேட்டனர்.

அதற்கு சரத் யாதவ் அளித்த பதில்: ""மதச்சார்பற்றக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். அதில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். அனைத்து பிரச்னைகள் பற்றியும் கேள்வியெழுப்ப கட்சியினருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். தேசிய செயற்குழு தொடங்கும் முன்பே, அதில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதைக் கூற முடியாது.

பொதுவான செயல்திட்டத்தின் அடிப்படையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். அதன்படி, ராமர் கோவில் உள்ளிட்ட கோரிக்கைகளை பாஜக தீவிரமாக வலியுறுத்தாமல் உள்ளது.

இதுவரை பாஜகவிலோ, ஐக்கிய ஜனதா தளத்திலோ பிரதமர் வேட்பாளர் பற்றி இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தனிப்பட்ட சிலர் கூறும் கருத்துகளை ஏன் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்?'' என்றார் சரத் யாதவ்.

அக்கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி சமீபத்தில் அளித்த பேட்டியில், ""வளர்ச்சிப் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை பிகாரிடமிருந்து நரேந்திர மோடி கற்றுக்கொள்ள வேண்டும். அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால், இப்போதே தன்னை வேட்பாளராகக் கருதிக் கொண்டு அவர் செயல்படுகிறார். நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஏப்ரல் 13, 14 தேதிகளில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம்'' என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்விக்கு, ""எங்களது கருத்துகளை பாஜகவிடம் தெரிவிப்போம். பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பாஜக முன்கூட்டியே கருத்துத் தெரிவிக்க வேண்டும்'' என்று நிதீஷ் குமார் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.