சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

2ஜி: ஜே.பி.சி. முன் பிரதமர் ஆஜராக வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (ஜே.பி.சி.) முன்

Updated On :2 ஏப்ரல் 2013, 8:23 am

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (ஜே.பி.சி.) முன் ஆஜராகுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "2ஜி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தி வந்தபோது அக்குழுவின் முன் ஆஜராக தாங்கள் முன்வந்தீர்கள். ஆனால், ஜே.பி.சி. முன் ஆஜராக வேண்டும் என்று அதன் பல்வேறு உறுப்பினர்கள் கோரியபோதும், தாங்கள் அதன் முன்பு ஆஜராக முன்வரவில்லை.

ஜே.பி.சி.யிடம் ராசா எழுதிய கடிதத்தில், பிரதமர் மீதும் நிதி அமைச்சர் சிதம்பரம் மீதும் தீவிரமான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் உங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட, ஜே.பி.சி. முன்பு தாங்கள் ஆஜராக வேண்டும். சிதம்பரமும் அக்குழுவின் முன் ஆஜராக நீங்கள் அறிவுறுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

ராசாவை விசாரிக்காதது தவறு முன்னதாக, யஷ்வந்த் சின்ஹா, புது தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தது:

ஜே.பி.சி. தலைவர் பி.சி.சாக்கோவுக்கு முன்னாள் அமைச்சர் ராசா எழுதிய கடிதத்தின் நகல் எனக்கு வந்துள்ளது. கூட்டுக் குழு முன்பு ஆஜராகி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சாட்சியாக வாக்குமூலம் அளிக்க தான் விரும்புவதாக ராசா மூன்று-நான்கு கடிதங்களை குழுத் தலைவர் சாக்கோவுக்கு எழுதியிருப்பதாக எனக்கு வந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசாவின் கடிதங்கள் தனக்கு கிடைத்ததாக சாக்கோ பதில் அளித்துள்ளாரே தவிர, வாக்குமூலம் அளிப்பது குறித்து எதுவும் கூறவில்லை என்று எனக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராசாவை ஜே.பி.சி. முன்பாக சாட்சியம் அளிக்க அழைக்காதது பெரும் தவறு. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு உண்மையை வெளிக்கொண்டு வருவதை விட்டுவிட்டு, உண்மையை மறைப்பதற்கு பயன்படுத்தப்படலாம்.

இது மிகத் தீவிரமான விஷயம். ஜே.பி.சி. உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து முழுமையாக அலசுவதற்கு உதவியாக ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று கூறி வருகிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, குழுத் தலைவர் சாக்கோ அப்படியொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை.

உண்மையை மறைக்கும் திசையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். அரசின் உத்தேசம் என்னவென்று தெரியவில்லை என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.