பாலியல் குற்றங்களில் மீண்டும், மீண்டும் ஈடுபடுவோருக்கு ஆயுள் கால சிறை தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் பாலியல் குற்றத் தடுப்பு மசோதா வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
தில்லியில் பஸ்சில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து கடும் தண்டனையுடன் கூடிய மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள், அனைத்து கட்சியினர் அரசை வலியுறுத்தினர்.
இந்நிலையில் குற்றவியல் அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார். இந்த அவசரச் சட்டம் வரும் ஏப்ரல் 4-ம் தேதியோடு காலாவதியாகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் பகுதி 22-ம் தேதியோடு முடிவடைவதால் பாலியல் குற்றத்தடுப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டியது.
ஏற்கெனவே கடந்த 19-ம் தேதி மக்களவையில் இம்மசோதா நிறைவேறியது. இந்நிலையில் வியாழக்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்தபின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியதாவது: இச்சட்டத்தின் பலனாக வரும் ஆண்டுகளில் சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். இச்சட்டம் சிறப்புச் சட்டமாக திகழ்கிறது. பாலியல் பலாத்காரம், அமில வீச்சு தாக்குதல், ஆள் கடத்தல், காம நோக்குடன் பெண்களை பெண்களை பார்த்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோருக்கு இச்சட்டம் கடும் தண்டனை வழங்க வகை செய்கிறது.
நமது நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளை பாதுகாக்கும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. செல்வாக்கு மிக்க நபர்களும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. பாதிக்கப்பட்டோரை செல்வாக்கை காட்டி அச்சுறுத்த முயலும் அதிகாரிகள், அரசியல் வாதிகள், பணபலம் படைத்தவர்கள் உள்ளிட்டோர் மீது பிரிவு 367-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் குழந்தைகளை கடத்துவோருக்கும் கடும் தண்டனை விதிக்க இதில் வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கு சம்பவத்தில் தொடர்பு இருந்தால் அவர்களையும் தண்டிக்க முடியும்.
தில்லி மாணவி பலாத்கார சம்பவம் நாட்டின் மனசாட்சியையே உலுக்கியது. இதனால் தான் பாலியல் வன்முறை தொடர்பாக தண்டனைகளை கடுமையாக்க நீதிபதி வர்மா குழுவை அரசு நியமித்தது.
புதிய வகை குற்றச்செயல்களுக்கும் தண்டனை விதிக்க இச்சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் தில்லி பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த மாணவிக்கு கெüரவம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
இச்சட்டத்தின் கீழ் எதிரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, அல்லது ஆயுள்கால சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.
மேலும் ஏற்கெனவே பாலியல் பலாத்கார சம்பவத்தில் தண்டனை பெற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. அமில வீச்சில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிறரது அந்தரங்க விஷயங்களை மறைந்திருந்து பார்ப்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யவும் வழி செய்யப்பட்டுள்ளது என்றார்.
இம்மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் பேசியது:
ஜெயா பச்சன் (சமாஜவாதி) :இச்சட்டம் ஆண்களுக்கு எதிரானதாகும். சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மட்டுமே நீதி கிடைக்கும் வகையில் இச்சட்டம் உள்ளது. பெண்களை திருப்திப்படுத்த ஆண்களுக்கு அநீதி இழைக்காதீர்.
சிவானந்த் திவாரி (ஐக்கிய ஜனதாதளம்): தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.
நஜ்மா ஹெப்துல்லா (பா.ஜ.க): இச்சட்டம் அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு மாத விடுமுறைக்கு பின் மீண்டும் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் குறித்து மறுவிவாதம் நடத்த வேண்டும். இளஞ்சிறார் சட்டத்திலும் தற்காலத்துக்கு ஏற்ப திருத்தம் கொண்டு வரவேண்டும்.
வசந்தி ஸ்டான்லி (திமுக), வ.மைத்ரேயன் (அதிமுக), அசோக் கங்குலி (நோம்) பரத்குமார் ரவுத் (சிவசேனா) உள்ளிட்டோரும் பேசினர்.
உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் வெங்கய்ய நாயுடு (பா.ஜ.க): இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாகும். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். ராகிங் சம்பவத்தையும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும். கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல், நடவடிக்கை எடுக்க காலவரையறை, நீதித்துறை சீர்த்திருத்தங்கள், பெண் போலீஸ் அதிகரிப்பு, நல்லொழுக்கல்வி போன்றவற்றுக்கும் அரசு முக்கியத்துவம் தர வேண்டும். போதிய விவாதம் நடத்தாமல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரவிசங்கர் பிரசாத் (பா.ஜ.க): பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவ உதவி தராத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி விரைவாக கிடைக்க உரிய கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும்.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): நீதிபதி வர்மா குழு பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றாமல் அரசியல் லாபத்துக்காக இச்சட்டம் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாயா சிங் (பா.ஜ.க): வீடுகளிலோ அல்லது வெளியிடங்களிலோ சிறுமிகள் பாதுகாப்பாக இல்லை. 53 சதவீத பெண் குழந்தைகள் பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையில் ஈடுபடும் எந்த சிறாரையும் சிறாராக கருதக்கூடாது.
பிரபா தாகூர் (காங்.): மத்திய கிழக்கு, ரஷியா, சீனா போன்ற நாடுகளில் இச்சம்பவங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுகிறது.
எஸ்.சி. மிஸ்ரா (பி.எஸ்.பி): பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்த வேண்டும். உயர்பதவிகளில் இருப்போர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் போலீஸார் தாமாகவே வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
டி.என். சீமா (மார்க்சிஸ்ட்): இச்சட்டத்தின் சில பிரிவுகள் ஆண் சிறார்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. காதல் வயப்படும் சிறுவனை எப்படி சிறைக்கு அனுப்ப முடியும். இச்சம்பவங்களில் ஈடுபடும் அதிகாரமிக்கவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பீர்கள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

