சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லி மாணவி பாலியல் வழக்கு: திஹார் சிறையில் முக்கிய குற்றவாளி தற்கொலை

தில்லி மாணவி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பஸ் ஓட்டுநர் ராம் சிங் (33) திஹார் சிறையில்

Updated On :12 மார்ச் 2013, 7:58 am

தில்லி மாணவி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பஸ் ஓட்டுநர் ராம் சிங் (33) திஹார் சிறையில் திங்கள்கிழமை அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார்.

""சிறைக்குள் விசாரணைக் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிறை வளாக பாதுகாப்பும் கண்காணிப்பும் பலவீனமாக இருப்பதையே உணர்த்துகிறது'' என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார்.

 தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி 23 வயது துணை மருத்துவ மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பஸ் ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், அவரது நண்பர்கள் பவன் குப்தா, அக்ஷய் தாகுர் சிங் வினய் சர்மா, 17 வயது மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 மைனர் சிறுவன் நீங்கலாக, ஐந்து பேர் மீதான வழக்கு சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அவர்கள் மீதான குற்றப் பத்திரிகை கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.

 இந்த நிலையில், திஹார் சிறையின் மூன்றாவது எண் கொண்ட சிறை வளாகத்தில் உள்ள அறையில் மூன்று கைதிகளுடன் ராம் சிங் அடைக்கப்பட்டிருந்தார். அவருடன் தில்லி பாலியல் சம்பவம் தொடர்பாக கைதான மற்ற நான்கு கூட்டாளிகள் வேறு சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராம் சிங் பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர் என அறிந்ததும் சக கைதிகள் அவர் மீது கடந்த ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தினர்.

 இந்த சம்பவத்துக்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் மன அழுத்தமும் தற்கொலை உணர்வும் ஏற்படாமல் தடுக்க நிபுணர்கள் மூலம் கவுன்சலிங் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐந்து பேரின் நடவடிக்கைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர் என திஹார் சிறை அதிகாரிகள் கூறி வந்தனர்.

 இந்த நிலையில், சிறை அறையின் மேல்புறத்தில் உள்ள இரும்புக் கம்பியில் ராம் சிங் தனது உடலில் அணிந்திருந்த ஆடைகளைக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

 இந்த சம்பவம் நடைபெற்றபோது சிறை அறைக்கு வெளியே ஒரு காவலர் பணியில் இருந்துள்ளார். அறைக்கு உள்ளே இருந்த மூன்று கைதிகள் அதிகாலையில் கண் விழித்தபோது தூக்கில் தொங்கிய ராம்சிங்கை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 இது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சிறைக் காவலர்கள் ராம் சிங்கை அருகில் உள்ள தீனதயாள் உபாத்யாய மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 இதற்கிடையே ராம் சிங் தற்கொலை செய்து கொண்டதாக தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தில்லி போலீஸின் தடயவியல் நிபுணர்கள் ராம் சிங் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனை செய்து தடயங்களைச் சேகரித்தனர்.

 சிறையில் விசாரணைக் கைதி மரணம் அடைந்துள்ளதால் விதிகளின்படி இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்துறை செயலரிடம் சிறை டிஜிபி விளக்கம்:  ராம் சிங் தற்கொலை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே. சிங்கிடம் திஹார் சிறை டிஜிபி விமலா மெஹ்ரா திங்கள்கிழமை நேரில் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம்

""ராம் சிங் மரணம் குறித்து எல்லா கோணங்களிலும் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் உண்மை என்ன என்பது தெரிய வரும்'' என்றார்.

 தில்லி சிறைத் துறை நிர்வாகம் பிரதேச துணைநிலை ஆளுநர் தேஜேந்தர் கன்னாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதே போல, சிறைத் துறையின் அமைச்சர் பொறுப்பை தில்லி முதல்வர் ஷீலா கவனித்து வருகிறார். தில்லி அரசில் உள்துறைச் செயலராக இருக்கும் பி.வி. செல்வராஜ் சிறைத் துறையின் நிர்வாக செயலராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நாட்டின் மிகப்பெரிய சிறையான திஹார் சிறையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளது.

12 ஆயிரம் கைதிகள் உள்ள இச்சிறையில் கடந்த 15 மாதங்களில் நடைபெறும் மூன்றாவது தற்கொலைச் சம்பவமாகும் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பாதுகாப்பில் குறைபாடு:
திஹார் சிறைக்குள் ராம்சிங் மரணமடைந்தது சிறை பாதுகாப்பு ஏற்பாட்டில் உள்ள குறைபாடுகளையே காட்டுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ராம் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்கொலையா அல்லது கொலையா என்பது மாஜிஸ்திரேட் விசாரணை முடிவில்தான் தெரிய வரும். இந்தச் சம்பவத்தை அடுத்து திஹார் சிறையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

தற்போது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தில்லி காவல் துறையின் நிர்வாகத்தை தில்லி மாநிலத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவது குறித்து  எனக்கு எழுத்து மூலமாக எந்த கோரிக்கையும் வரவில்லை. சிறையில் நவீன பாதுகாப்புக் கருவிகள்  பொருத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சிறைத்துறை எனது அமைச்சகத்தின் கீழ் செயல்படவில்லை என்று பதிலளித்தார் ஷிண்டே.

சிபிஐ விசாரிக்க கோரிக்கை:
ராம்சிங் சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என்று அவரின் தந்தை மங்கே லால் கோரியுள்ளார்.

""எனது மகன் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனையை அனுபவிக்கும் மனநிலையில் இருந்தான்; கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கூட அவனை நாங்கள் சிறையில் சந்தித்துப் பேசினோம். அப்போது "சிறையில் தனக்கு ஆபத்து உள்ளது' என்றான். சிறையில் ராம் சிங்கை சக கைதிகள் தாக்கி வருவதாகவும் கூறினார். அவனது சாவில் மர்மம் உள்ளது. இந்த விஷயத்தில் போலீஸ் நடத்தி வரும் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை'' என்றார்.

 ராம் சிங் சார்பில் ஆஜராகி வந்த வழக்குரைஞர் வி.கே. ஆனந்த், குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் வழக்குரைஞர்கள் ஆகியோரும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

 வழக்குரைஞர் வி.கே. ஆனந்த் கூறுகையில், ""ராம் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். அவர் மரணம் அடைந்துவிட்டதால் தில்லியில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகக் கருதுகிறேன். இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவேன்'' என்றார்.

 பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வினய் சர்மா, அக்ஷய் தாகுர் சிங் ஆகியோர் சார்பில் ஆஜராகி வரும் வழக்குரைஞர் ஏ.பி. சிங், ""ராம் சிங் மன அழுத்தத்துடன் இருப்பாரானால் மூன்று மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டபோதே அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும். ராம் சிங் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறுவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் கோருவோம்'' என்றார்.