சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாடத்திட்டத்தில் தற்காப்புக் கலைகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு உத்தரவு

உயர்நிலை வகுப்பு மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்காப்புக் கலைகளையும்

Updated On :2 மார்ச் 2013, 6:42 am

உயர்நிலை வகுப்பு மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்காப்புக் கலைகளையும் சேர்க்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சசி தரூர், மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துக் கூறியது:

எனது அமைச்சகம் ஜனவரி மாதத்தில் மாநில கல்வித்துறைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியது. அதில் உயர்நிலை வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்காப்புக் கலைகளையும் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் மாணவ, மாணவிகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்து செய்திகள் வருகின்றன. எனவே, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட சில ஆலோசனைகளை அளிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளோம். இக்குழு, பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் கடிதம் எழுதி வருகிறது. தில்லி பாலியல் பலாத்காரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து படிப்புகளிலும் பாலின விழிப்புணர்ச்சி குறித்த பாடத்திட்டங்களைச் சேர்க்க வலியுறுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் இந்தப் பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்றார் சசி தரூர்.

மாநிலங்களவையில் கேள்விகளுக்குப் பதிலளித்து மற்ற அமைச்சர்கள் அளித்த பதில்கள் வருமாறு:

இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு: மாநிலங்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவிக்கையில், ""அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இயற்கை வேளாண்மை தொடர்பான தேசியத் திட்டம், தேசிய தோட்டக்கலைத் திட்டம் ஆகியவை அவற்றில் அடங்கும். இது தவிர, கண்காட்சிகள், வேளாண் வர்த்தக மையங்கள், வானொலி நிகழ்ச்சிகள், வேளாண்மை விரிவாக்க நடவடிக்கைகள் மூலமும் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்துகிறது.

விவசாயிகள் தங்களின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் ரசாயன உரங்களைப் பயன்படுத்துகின்றனர். இப்போதைக்கு, இயற்கை வேளாண்மை முறையில் உற்பத்தியாகும் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை'' என்றார்.

அவர் மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், ""முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2012ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரிக்கவில்லை. 2012இல் ஆந்திரப் பிரதேசத்தில் 29, கர்நாடகத்தில் 33, மகாராஷ்டிரத்தில் 473 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தெரிவித்துள்ளன'' என்று குறிப்பிட்டார்.

ஏர்டெல் மீது புகார்: மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் மிலிந்த் தேவ்ரா தெரிவிக்கையில், ""இந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மீதே கட்டணம் மற்றும் பில்லிங் தொடர்பாக நுகர்வோரிடம் இருந்து அதிகபட்ச புகார்கள்  டிராயிடம் அளிக்கப்பட்டுள்ளன.

2012-13இல் ஜனவரி மாதம் வரை ஒட்டுமொத்தமாக 2,419 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் பார்தி ஏர்டெல் மீது 745, வோடபோன் மீது 505, டாடா டெலிசர்வீசஸ் மீது 345, ரிலையன்ஸ் மீது 329, ஐடியா மீது 194, பிஎஸ்என்எல் மீது 122, எம்டிஎன்எல் மீது 36, மற்றவர்கள் மீது 143 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன'' என்று பதிலளித்தார்.

52 பொறியியல் கல்லூரிகள் மூடல்: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தெரிவிக்கையில், ""நாட்டில் 2011-12 மற்றும் 2012-13ஆம் கல்வியாண்டுகளில் 52 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன.

இதனால் 194 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வேறு கல்லூரிகளில் சேர அனுமதிக்கப்பட்டது.

மேலும் 25 பொறியியல் கல்லூரிகளா மூடுவதற்கான விண்ணணப்பங்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலுக்கு வந்துள்ளன'' என்றார்.

புற்றுநோய் மருந்துகள்: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜேனா, ""புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளை உள்நாட்டிலேயே குறைந்த விலையில் தயாரிப்பதற்காக இந்தியாவின் எம்கியூர் ஃபார்மா நிறுவனத்துடன் சுவிஸ் நாட்டின் ரோஷ் மருந்து நிறுவனம் தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதன் மூலம் ரோஷ் நிறுவனத்தின் டிராஸ்டுசுமாப், ரிதுக்ஸிமாப் ஆகிய புற்றுநோய் மருந்துகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்'' என்றார்.

ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை: ரயில்வே துறை இணை அமைச்சர் கோட்ல ஜெயசூர்ய பிரகாஷ் அளித்த பதிலில் ""கடந்த ஆண்டில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் மீது பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது தொடர்பாக 5 புகார்களும், ரயில்வே போலீஸ்காரர் மீது ஒரு புகாரும் பதிவு செய்யப்பட்டன.

இதே ஆண்டில் ஆயுதப்படை போலீஸார் மீது 9 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன'' என்று தெரிவித்தார்.