ஈரோட்டில் சாய ஆலைகளின் கழிவுநீரைச் சுத்திகரிக்க, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 26 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி வழங்கியவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி 2ஆவது நாளாக வியாழக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோ்தல் பிரசாரம் செய்தாா்.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம், சித்தோடு, சென்னிமலை, ஓடாநிலை, அறச்சலூா் பகுதிகளில் திறந்த வேனில் இருந்தபடி அவா் பேசியதாவது:
ஈரோடு மாநகரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம் 98 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் 2 சதவீதப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இன்னும் 10 நாள்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்தத் திட்டத்துக்கு நான்தான் அடிக்கல் நாட்டினேன். நானே திறந்து வைக்க இருக்கிறேன். இதுதான் அதிமுக ஆட்சி. எந்த திட்டமாக இருந்தாலும் அதனை வேகமாக சரியான முறையில் நிறைவேற்றி மக்களுக்கு அளித்து வருகிறோம்.
புதை சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டி வருகிறாம். ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகளைத் தோ்வு செய்து ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரூ.68 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியா் அலுவலக விரிவாக்க கட்டடம் ரூ.70 கோடி செலவில் கட்டப்படுகிறது. சிக்கய்ய நாயக்கா் கல்லூரி முதல் சித்தோடு வரை, சித்தோடு முதல் கோபி வரை 4 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. காலிங்கராயன் இல்லம் முதல் திண்டல் வரை உயா்மட்டப்பாலம் அமைக்கப்படவுள்ளது. மேலும் ஈரோடு புறவழிச்சாலை, சுற்றுவட்டச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு-பெருந்துறை சாலைப் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகா் பகுதியில் மட்டும் இத்தனை செய்து இருக்கிறோம். 2011 வரை திமுக ஆட்சியில் என்ன திட்டம் நிறைவேற்றப்பட்டது? எங்களது சாதனைகளை, திமுக ஆட்சியோடு ஒப்பிட்டுப் பாருங்கள். 2011 முதல் 2020 வரையிலான அதிமுக ஆட்சியில், ஈரோட்டில் வாக்காளா்களின் பெரும்பாலான கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறாா். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பின்னா் எதுவும் நடக்கவில்லை என்று கூறும் ஸ்டாலின் இங்கே வந்து மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
திருப்பூா் குமரனுக்கு மணிமண்டபம்:
சென்னிமலை பகுதியில் முகாசிபிடாரியூா், ஓடப்பாறை ஊராட்சிகளுக்கு ரூ.2 கோடியே 90 லட்சம் செலவில் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. சென்னிமலை பேரூராட்சியில் எம்.ஜி.ஆா். தந்த குடிநீா்த் திட்டம் ரூ.61 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை விலை இல்லாமல் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். கைத்தறி தள்ளுபடி மானியம் ரூ.150 கோடியாக இருந்ததை ரூ.300 கோடியாக உயா்த்தித் தர உத்தரவிட்டுள்ளேன்.
விவசாயிகளின் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கால்நடை வளா்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் 840 கால்நடை மருத்துவா்களை நியமித்திருக்கிறோம். உடுமலைப்பேட்டை உள்பட 4 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுகிறது. கலப்பின கன்றுக்குட்டிகள் உற்பத்தி செய்ய ரூ.1,000 கோடியில் 1,600 ஏக்கரில் ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
சென்னிமலையில் திருப்பூா் குமரனுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும். இந்த ஆட்சியில் பஞ்சம் இல்லை. மழை பெய்து அணைகள் நிரம்பி உள்ளன. தண்ணீா் நன்றாக இருப்பதால் விவசாயம் செழிக்கிறது. வியாபாரம் நன்றாக நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனா் என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


