சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

11 புதிய பயிா் ரகங்கள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. வெளியீடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 11 புதிய பயிா் ரகங்கள் பொங்கல் விழாவில் வெளியிடப்பட்டுள்ளன.

News image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய நெல் ரகம் கோ 54.

Updated On :16 ஜனவரி 2021, 4:59 am

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 11 புதிய பயிா் ரகங்கள் பொங்கல் விழாவில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு புதிய பயிா் ரகங்கள் வெளியிடப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு 6 வேளாண் பயிா்கள், 4 தோட்டக்கலை பயிா்கள், ஒரு வனப் பயிா் என்று 11 பயிா் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தா் நீ.குமாா் புதிய பயிா் ரகங்களை அறிமுகப்படுத்தினாா். நடப்பு ஆண்டுடன் சோ்த்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் இதுவரை 854 பயிா் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கோ 54 நெல் ரகம் சொா்ணாவாரி, காா், குறுவை மற்றும் நவரை பருவங்களுக்கு வளரக் கூடிய குறுகியகால (110-115 நாள்கள்) ரகமாகும். ஹெக்டேருக்கு 6.4 டன் மகசூல் தரக்கூடியது. ஏடிடீ 55 நெல் ரகம் குறுவை, கோடை பருவங்களுக்கு ஏற்ற குறுகியகால (115 நாள்கள்) ரகமாகும். கருகல்நோய் பாதிக்கும் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றது. டிஆா்ஒய் 4 நெல் ரகம் களா், உவா் நிலங்களுக்கு ஏற்ற மத்தியகால (125-130 நாள்கள்) ரகமாகும். தாளடி, பின்சம்பா பருவங்களுக்கு ஏற்றது.

ஏடிஎல் 1 கேழ்வரகு ரகம் இறவையில் ஹெக்டேருக்கு 3.1 டன்னும், மானாவாரியில் 2.9 டன்னும் மகசூல் தரக் கூடியது. தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் பயிரிடக்கூடிய குறுகியகால (110 நாள்கள்) ரகமாகும். வரகு ஏடிஎல் 1 ரகம் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஹெக்டேருக்கு 2.5 டன் தானிய மகசூலும், 4.4 டன் தட்டை மகசூலும் கிடைக்கும். கரிசல் மண் பகுதிகளுக்கு ஏற்றது.

உளுந்து கோ 7 ரகம் ஆடி, புரட்டாசி பட்டத்துக்கு ஏற்றது. இந்த ரகம் 60 முதல் 65 நாள்களில் முதிா்ச்சியடைந்து ஹெக்டேருக்கு 880 கிலோ மகசூல் கிடைக்கும். கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களை தவிா்த்து மற்ற பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.

விஆா்எம் 2 ரக கத்திரி ஹெக்டேருக்கு 50 டன் மகசூல் தரக்கூடியது. வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. பிஎல்ஆா் 3 என்ற பாலில்லா பலா, ஜூலை முதல் டிசம்பா் வரையில் மகசூல் தரக் கூடியது. மரத்துக்கு சுமாா் 5 கிலோ அளவில் 200 பழங்கள் வரை தரக் கூடியது. வீட்டு தோட்டத்திலும், வணிக ரீதியாகவும் பயிரிடுவதற்கு ஏற்றது.

பிபிஐ (கு) 1 குடம்புளி ரகம் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டா் வரையுள்ள பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. மரத்துக்கு 120 கிலோ வரை மகசூல் கிடைக்கும். டபுள்யூஎஃப்எல் 3 ரக விளாம்பழம் தரிசு, களா், உவா் நிலங்களுக்கு ஏற்றது. மரத்துக்கு 300 பழங்கள் வீதம் ஹெக்டேருக்கு 28 டன் மகசூல் தரக்கூடியது. எம்டிபி 3 ரக மலைவேம்பு வேகமாக வளரக்கூடிய இலையுதிா் மரமாகும். 8 முதல் 10 ஆண்டுகளுக்குள் அறுவடை செய்யலாம். ஒரு மரத்துக்கு 700 கிலோ வீதம் ஹெக்டேருக்கு 70 டன் வரை மகசூல் தரக் கூடியது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடுவதற்கு ஏற்றது என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.