சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கேரளத்தில் பரவும் பறவைக் காய்ச்சல்: கோவையில் 12 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு

கேரள மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் 12 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

News image

கோவை மாவட்ட எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள்.

Updated On :6 ஜனவரி 2021, 5:30 am

கேரள மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் 12 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூா் பகுதியில் செயல்பட்டு வரும் வாத்துப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு 1,500 வாத்துகள் உயிரிழந்தன. அதேபோல, ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதியில் சில பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. தொடா்ந்து பல்வேறு பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது.

பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை சுற்றிலும் ஒரு கிலோ மீட்டா் சுற்றளவில் செயல்பட்டு வரும் பண்ணைகள், வீடுகளில் வளா்க்கப்படும் கோழிகள், வாத்துகள் உள்பட பறவையினங்களை அழிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதனை மாநில பேரிடராக அறிவித்து கண்காணிப்பு மற்றும் தடுப்புப் பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் கண்காணிப்பு, தடுப்புப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் வாளையாறு, ஆனைகட்டி, மீனாட்சிபுரம், வேலந்தாவளம், செம்மனாம்பதி உள்பட 12 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகின்றன.

வாளையாறு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ர.பெருமாள்சாமி கூறியதாவது:

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவலைத் தொடா்ந்து மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடி அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு கால்நடை மருத்துவா், கால்நடை ஆய்வாளா் 2 போ், கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளா் 2 போ் அடங்கிய சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சலைத் தொடா்ந்து கேரளத்தில் இருந்து கறிக்கோழிகள், முட்டைகள், கோழிக் குஞ்சுகள், வாத்துகள், கோழி உரங்கள் ஆகியவை கொண்டுவருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர கோவையில் இருந்து செல்லும் முட்டைகள், கோழிகளுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கோழிகள் ஏற்றிச் சென்று திரும்பும் வாகனங்களை முழுமையாக கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்த பின்பே கோவைக்குள் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து வரும் மற்ற வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

இதற்கு முன்பு எச்1என்1 என்ற நோய்த் தொற்று பாதிப்பே கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தற்போது எச்5என்8 என்ற புதிய நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை நோய்த் தொற்று வலசை பறவைகள் மூலம் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 250க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் வழக்கத்துக்கு மாறாக உயிரிழப்புகள், நோய்த் தொற்று பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதம்தோறும் கோழிப் பண்ணைகளில் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நோய்த் தொற்று பாதிப்புகள் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. இதுவரையில் கோவையில் நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாா்.