சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி தொழிலாளர்கள் வாரிசுகளுக்கு 20 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கீடு

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் காப்புறுதி திட்ட நிறுவனத்தின் (இ.எஸ்.ஐ.சி.) மருத்துவக் கல்லூரியின் 20 எம்.பி.பி.எஸ். இடங்கள் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 8:22 am

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் காப்புறுதி திட்ட நிறுவனத்தின் (இ.எஸ்.ஐ.சி.) மருத்துவக் கல்லூரியின் 20 எம்.பி.பி.எஸ். இடங்கள் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன.

சென்னை கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் காப்புறுதி திட்ட நிறுவனத்தின் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு அங்கு முதுநிலை மருத்துவ படிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2013- 2014-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கென்று 100 எம்.பி.பி.எஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டன. வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்டவற்றுக்கான கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டது. அதற்கான கலந்தாய்வு நடைபெற்று மாணவர் சேர்க்கை நடைபெற்றுவிட்டது. மீதமுள்ள 35 இடங்களில், 15 எம்.பி.பிஎஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக வழங்கப்பட்டுவிட்டன.

தொழிலாளர் வாரிசுகளுக்கு... மீதம் உள்ள 20 இடங்கள் தொழிலாளர் காப்புறுதி திட்டக் கழக உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 20 இடங்களும் அகில இந்திய அளவிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தொழிலாளர் காப்புறுதியை செலுத்தியிருக்க வேண்டும். இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் தேசிய தகுதி- நுழைவுத் தேர்வில் (என்.இ.இ.டி.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கலந்தாய்வு: இ.எஸ்.ஐ. தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். கொல்கத்தாவில் உள்ள இ.எஸ்.ஐ. கல்லூரியில் 52 இடங்கள், பெங்களூரில் 45 இடங்கள், குல்பர்காவில் 45 இடங்கள், சென்னையில் 20 இடங்கள் என மொத்தம் 162 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளன.

தொழிலாளர் வாரிசுகளின் ரேங்க் பட்டியல் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்படும். முதல்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு (தேவைப்பட்டால்) செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கே... ஏற்கெனவே அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15 இடங்கள் வழங்கப்பட்டுவிட்டன. அதனால் மீதம் இருக்கும் 20 இடங்களை தமிழக தொழிலாளர்கள் வாரிசுகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிலாளர் காப்புறுதி திட்ட நிறுவனத்திற்கு தமிழகத்தின் பங்களிப்பு கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.900 கோடி ஆகும். அதிக பங்களிப்பை வழங்கும் தமிழகத்தின் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கே 20 இடங்களை ஒதுக்குவது குறித்து அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக இ.எஸ்.ஐ. நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தொழிலாளர் காப்புறுதித் திட்ட நிறுவனத்தின் மண்டல இயக்குநர் பி.பி.மணி கூறுகையில் கொல்கத்தா, பெங்களூர், குல்பர்கா (கர்நாடக மாநிலம்) ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில்தான் இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதே முறைதான் இங்கும் பின்பற்றப்படுகிறது. தொழிலாளர்களின் வாரிசுகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள 20 இடங்கள் பூர்த்தியாகாவிட்டால், அந்த இடங்கள் தமிழக அரசு ஒதுக்கீட்டிற்கே சென்றுவிடும். அதன்பின்பு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.

கல்விக் கட்டணம் எவ்வளவு?

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியின் 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ. 24 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டிற்கான 65 இடங்கள் நிரப்பப்பட்டன.

அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வும், தொழிலாளர்களின் வாரிசுகளுக்கான இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சென்னை கே.கே.நகர் மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) சேர்ந்தனர்.

ஆண்டுக் கட்டணம் தவிர, டெபாசிட் தொகையாக ரூ. 5 ஆயிரம், பல்கலைக்கழக பதிவு கட்டணமாக ரூ. 4910-ம் அவர்கள் செலுத்தினர்.