சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் மேற்கூரை சனிக்கிழமை நள்ளிரவு சரிந்து விழுந்தது. நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது அந்த இடத்தில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கூரைகள் தரமானதா என விசாரணை நடத்த விமான நிலைய ஆணையகம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன்கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் ரூ.2,015 கோடி செலவில் கட்டப்பட்டது. இதை குடியரசு துணைத் தலைவர் ஹமீதுஅன்சாரி, கடந்த ஜனவரி மாதம் திறந்து வைத்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு முனையம், புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த முனையத்தில் மேல் தளத்தில் புறப்பாடு பகுதியும், கீழ் தளத்தில் வருகை பகுதியும் செயல்படுகிறது.
புதிய உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில் பயணிகள் போர்டிங் பாஸ் வாங்கும் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு 1.45 மணியளவில் மேற்கூரை (பால்சீலிங்) திடீரென சரிந்து விழுந்தது. பயங்கர சப்தத்துடன் சுமார் 100 சதுர அடி அளவில் உடைந்து விழுந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து பார்த்தனர்.
நள்ளிரவு நேரங்களில் உள்நாட்டு முனையங்களில் விமான போக்குவரத்து கிடையாது. இதனால் அங்கு பயணிகள், ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
அந்த நேரத்தில் மேற்கூரை விழுந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து சரிந்து விழுந்த மேற்கூரையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்தில் அவை அப்புறப்படுத்தப்பட்டன. அதிகாலை 4 மணிக்கு பிறகு உள்நாட்டு முனையத்துக்கு பயணிகள் வருகை தொடங்கியது.
2-ஆவது முறை: புதிய கட்டடத்தில் இயங்கி வரும் உள்நாட்டு முனையத்தில் தற்போது 2-ஆவது முறையாக மேற்கூரை சரிந்து விழுந்து உள்ளது. ஏற்கெனவே கடந்த மே மாதம் 13-ஆம் தேதியும் இதேபோல நள்ளிரவு நேரத்தில் மேற்கூரை சரிந்து விழுந்தது நினைவுகூரத்தக்கது.
மழைநீர் தேங்கி இருந்ததால் மேற்கூரை விழுந்ததாக அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, ஏசியில் இருந்து வெளியேற வேண்டிய தண்ணீர் சரியாக வெளியேறாததால் பால்சிலிங் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கூரை விழுந்த பகுதியை சென்னை விமான நிலைய இயக்குநர் சுரேஷ், ஞாயிற்றுக்கிழமை காலை பார்வையிட்டார். ஆனால் இதுபற்றி அவர், கருத்து எதுவும் கூறவில்லை. பயணிகள் செல்லும் நேரத்தில் மேற்கூரை விழுந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணைக்கு உத்தரவு: உள்நாட்டு முனையத்தில் ஏற்கெனவே மேற்கூரை இடிந்து விழுந்தபோது கட்டடங்கள் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்தது. புதிய கட்டடத்தில் கழிப்பிடங்கள் உள்ளிட்ட வசதிகள் தரமானதாக இல்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்டவை தரமான பொருள்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள், கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் உள்ள மேற்கூரைகள் தரமானதா என விசாரணை நடத்தும்படி கட்டுமான அதிகாரிகளுக்கு விமான நிலைய ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

