சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பா.ம.க. தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து வழக்கு

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 10:14 am

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திலும், மத்திய முன்னாள் அமைச்சரும், கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி சென்னை தியாகராய நகரிலும் வசித்து வருகின்றனர். இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

அரசியல் தலைவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. பா.ம.க. தலைவர்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல்கள் நிலவுவதை போலீஸ் அதிகாரிகள் நன்றாகவே அறிவார்கள். இந்நிலையில் பா.ம.க. தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதற்கு பதிலாக, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் தமிழக அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

அரசியல் காரணங்களுக்காக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது. ஆகவே, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணித் தலைவர் அன்புமணிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிடுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ஜி.கே.மணி கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, பா.ம.க. தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய தருணத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட பாதுகாப்பைக்கூட விலக்கிக் கொள்வது என்பது சட்ட விரோதமானது என வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, இந்த விவகாரம் தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.