சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே படுகொலைகள்

இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே பாஜக தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக பாஜக மூத்தத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

Updated On :22 ஜூலை 2013, 10:44 am

இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே பாஜக தலைவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக பாஜக மூத்தத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: பாஜக மாநிலப் பொதுச்செயலாளரும் ஆடிட்டருமான ரமேஷ், சேலத்தில் அவரது வீட்டு வாசலில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் படுகொலை கடும் கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் பாஜக மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி, பரமக்குடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் முருகன், ஆடிட்டர் ரமேஷ் என பலர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர்.

பாஜக மூத்தத் தலைவர் எம்.ஆர். காந்தி. மாநில துணைத் தலைவர் எச். ராஜா, ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் ஆனந்த், இந்து முன்னணி நிர்வாகி ஹரி, ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர் பாஸ்கர் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகி அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். கடந்த ஆண்டு ரத யாத்திரையின்போது அத்வானியை கொல்ல முயற்சி நடந்தது.

இந்தக் கொலைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு ஒரே மாதிரியாக நடந்துள்ளது. எனவே, இதன் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.

இந்து அமைப்புகளின் தலைவர்களை அச்சுறுத்தி, அதன் செயல்பாடுகளை முடக்கவே திட்டமிட்டு இந்த தொடர் படுகொலைகளை நடத்தி வருகின்றனர். முன்பெல்லாம் குண்டு வைத்து கொன்றனர். இப்போது அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொல்கின்றனர். ஆடிட்டர் ரமேஷ் உடலில் 17 இடங்களில் வெட்டியுள்ளனர்.

ஏற்கெனவே ரமேஷின் கார் தாக்கப்பட்டது. அப்போதே போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த துயரச் சம்பவம் நடந்திருக்காது.

1998-ஆம் ஆண்டு கோவைக்கு அத்வானி வருகையின்போது தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதன் பிறகு அல்-உம்மா என்ற அமைப்பு இருப்பது தெரியவந்தது. இப்போது இவர்கள் பல்வேறு பெயர்களில் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களைக் கண்டறிந்து உடனடியாக தண்டனை பெற்றுத்தர வேண்டும். முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் படுகொலை குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் பிரிவை அமைத்துள்ள முதல்வருக்கு நன்றி. இந்தத் தொடர் படுகொலைகளைக் கண்டித்து திங்கள்கிழமை (ஜூலை 22) முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.

பேட்டியின்போது பாஜக தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில அலுவலகச் செயலாளர் சர்வோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.