சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பள்ளி வாகனங்கள் தகுதிச் சான்று பெற இறுதி வாய்ப்பு

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதை இரு தினங்களுக்குள் முடித்துக் கொள்ளுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On :12 ஜூன் 2013, 8:19 am

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதை இரு தினங்களுக்குள் முடித்துக் கொள்ளுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன் காரணமாக பள்ளி வாகனங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூன் 14) தகுதிச் சான்று பெற்றுவிட வேண்டும் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர் விபத்துகளைத் தடுக்கும் வகையிலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் நிற வர்ணம் அடிக்க வேண்டும். வாகனத்தின் முன்புறமும், பின்புறமும் பள்ளி வாகனம் என எழுத வேண்டும். வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும். ஓட்டுநர் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட தகுதிச் சான்றிதழ், இருக்கை பெல்ட் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றி பள்ளி வாகனங்கள் தகுதிச் சான்று பெற கடந்த 10-ஆம் தேதியை கடைசி நாளாக போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது.

ஆனால், இந்தக் காலக் கெடுக்குள் தமிழகம் முழுவதும் 12,559 பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று தரப்பட்டன. மேலும் 2,390 வாகனங்கள் தகுதிச் சான்று அளிக்க தகுதியில்லாதவை என தெரியவந்தது.

இந்த நிலையல், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை தொடர்பான அறிவிப்புகளை செயல்முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது, பள்ளி வாகனங்கள் மீதான ஆய்வுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து இரு தினங்களுக்குள் முடிக்குமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஆணையர் பிரபாகர் ராவ் கூறியது:

தமிழகம் முழுவதும் தீவிர ஆய்வு மேற்கொண்டதில் 2,390 பள்ளி வாகனங்கள் தகுதிச் சான்று அளிக்க தகுதியில்லாதவை என்பது தெரியவந்துள்ளது.

அமைச்சரின் அறிவுரைப்படி இந்த வாகனங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரை இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து, தகுதிச் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வாகனங்களை சாலைகளில் இயக்க அனுமதி மறுக்கப்படும் என்றார்.

மேலும் சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களில் சில, சட்டத்துக்குப் புறம்பாக உரிமம் இல்லாத மற்றும் சீருடை அணியாத ஓட்டுநர்களால் இயக்கப்படுகின்றன. இதைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை அணிவதோடு, அதில் அவர்களுடைய பெயர் மற்றும் உரிம எண் ஆகியவை எழுதப்பட்ட "பேட்ஜ்' அணிந்திருப்பதும் கட்டாயம் என்றும் அவர் கூறினார்.