சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவல் நிலையம் சென்ற ஆட்டோ டிரைவர் மர்ம சாவு: பொதுமக்கள் சாலை மறியல் நீதிபதி விசாரணை

சென்னை மதுரவாயல் காவல் நிலையத்துக்குச் சென்ற ஆட்டோ டிரைவர் மர்மான முறையில் உயிரிழந்ததை கண்டித்து

Updated On :2 ஏப்ரல் 2013, 10:25 am

சென்னை மதுரவாயல் காவல் நிலையத்துக்குச் சென்ற ஆட்டோ டிரைவர் மர்மான முறையில் உயிரிழந்ததை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.

ஆட்டோ டிரைவர் மர்மச் சாவு குறித்து பூந்தமல்லி நீதிபதி விசாரணை செய்து வருகிறார்.

இது குறித்த விவரம்:

மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கதிரவன் (32). இவர் அங்கு ஆட்டோ ஓட்டி வந்தார். கதிரவனுக்கும் ஆலப்பாக்கம் ராமசாமி தெருவைச் சேர்ந்த பொன்னி என்ற சசிகலாவுக்கும் (32) தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கதிரவனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் பெண் பார்க்க தொடங்கினராம்.

இதனால் கதிரவனுக்கும், பொன்னிக்கும் இடையே தகராறு நடந்து வந்ததாம். இந்நிலையில் கதிரவன் மதுபோதையில் பொன்னின் வீட்டு முன்பு நின்று அவரிடம் ஞாயிற்றுக்கிழமை தகராறு செய்து கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு வந்த போலீஸார், அவர்கள் இருவரையும் விசாரணைக்காக  மதுரவாயல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலில் பொன்னியிடம்  விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனராம்.

பின்னர் கதிரவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் மயங்கி விழுந்துள்ளார். போலீஸார் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட கதிரவன், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சோதித்து பார்த்த மருத்துவர்கள், கதிரவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். பூந்தமல்லி 2வது நீத்துறை நடுவர் மன்ற நீதிபதி ஃபரூக் அப்துல்லா விசாரணை நடத்தி வருகிறார்.

பொதுமக்கள் சாலைமறியல்: இந்நிலையில், போலீஸார் தாக்கியதில் தான் கதிரவன் உயிரிழந்ததாகவும், அதற்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மேட்டுக்குப்பம் பொதுமக்கள், வானகரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்கள் சமாதானமடையாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சாலையில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.